
புதுடெல்லி,
இந்தியாவின் 26-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக, ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழு கூடி ஞானேஷ்வர் குமார் பெயரை அறிவித்துள்ளது. இன்று முறைப்படி பதவியேற்க இருக்கும் ஞானேஷ்குமார், 2029ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புதிய சட்டம் இயற்றப்படும்வரை, தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிய குழு தேர்வு செய்ய வேண்டும் என்று கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய மந்திரி அடங்கிய குழு, தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. அச்சட்டத்தின்படி, கடந்த ஆண்டு 2 தேர்தல் கமிஷனர்களும், நேற்று முன்தினம் தலைமை தேர்தல் கமிஷனரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மேற்கண்ட சட்டம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது என்று கூறி, ஜனநாயக சீர்திருத்த சங்கம், காங்கிரஸ் பிரமுகர் ஜெயா தாக்குர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த மனுக்கள், இன்று (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. ஆனால், 41-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னதாக நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, மனுக்களை அவசரமாக எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முன்னுரிமை அளித்து, இன்று காலையிலேயே விசாரிப்பதாக தெரிவித்தனர்.