பாட்னா: தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பீகாரில் நடந்த சாலை மறியல் போராட்டம், பேரணியில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என மகாபந்தன் கூட்டணி (காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா, இடதுசாரிகள்) கட்சிகள் கடந்த திங்கட்கிழமை அறிவித்தன. பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், இடதுசாரி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறுகிய காலத்தில் நடத்தப்படுவதாகவும், இதுபோன்ற நடவடிக்கை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக அமையும் நோக்கில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் இன்று பீகார் மாநிலம் முழுவதும் ‘சக்கா ஜாம்’ எனப்படும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. 10 ஒன்றிய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துடன் இணைந்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பாட்னாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்றனர். வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணியாக செல்ல முயற்சித்த போது, அவர்கள் தடுக்கப்பட்டனர். இந்த பேரணியில் மகாபந்தன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி மற்றும் சுயேச்சை தலைவர் பப்பு யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஹாஜிப்பூரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் காந்தி சேது பாலத்தை மறித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சோன்பூரில், ஆர்ஜேடி சட்டமன்ற உறுப்பினர் முகேஷ் ரோஷன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. பல இடங்களில் டயர்கள் எரிக்கப்பட்டு சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. இதேபோல், ஜெஹானாபாத் ரயில் நிலையத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மாணவர் அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்துள்ள முக்கிய இடங்களில் அசம்பாவிதங்களைத் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பீகாரில் சாலை மறியல் போராட்டம்: பேரணியில் ராகுல், தேஜஸ்வி பங்கேற்பு appeared first on Dinakaran.