தேர்தலை நோக்கமாகக் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - எடப்பாடி பழனிசாமி

1 day ago 3

தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தன. இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலமாக கச்சத்தீவு மீட்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் மீதான விவாதத்தின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் கச்சத்தீவு விவகாரத்தில் என்ன செய்தீர்கள்? வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்தபோது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து பேச முற்பட்டபோது எடப்பாடி பழனிசாமியை சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தேர்தலை நோக்கமாகக் கொண்டுதான் கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை தி.மு.க. கொண்டு வந்துள்ளது. மீனவர்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் வரும் நேரத்தில் இதுபோன்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து தி.மு.க. நாடகமாடுகிறது. மீனவர்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்று ஆட்சியின் 5-வது ஆண்டில் தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நான்கு ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது ஏன் தீர்மானம் கொண்டு வரவில்லை?

தி.மு.க. அரசு உறுதியான முடிவு எடுக்காததால்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் மீனவர்கள் சோதனைக்கு ஆளாக்கப்பட்டனர். 16 ஆண்டுகளில் 5 பிரதமர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தும் கச்சத்தீவை மீட்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு மீட்பு குறித்து அழுத்தம் தரவில்லை?

மீனவர்களின் உரிமை பறிபோகும் என்று நாங்கள் கச்சத்தீவு தாரை வார்க்கப்படுவதை எதிர்த்தோம். கச்சத்தீவு மீட்புக்காக 2008-ல் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article