சென்னை: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதை அமித் ஷா தெளிவுபடுத்தி உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக-வும் பாஜக-வும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், இனி தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதையடுத்து கூட்டணி அமைந்தபோது அமித் ஷா பேசியதை குறிப்பிட்ட எடப்பாடி, கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷாவின் பேட்டி பற்றி விளக்கம் அளிக்கவில்லை. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும், பாஜக அமைச்சரவையில் இடம்பெறும் என்ற அமித் ஷாவின் கருத்து பற்றி தற்ப்போது வரை எடப்பாடி மவுனம் காத்து வருகிறார்.
இந்நிலையில், பாஜக மட்டுமின்றி அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கூட்டணி ஆட்சியை வலியுறுத்துகின்றனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதை அமித் ஷா தெளிவுபடுத்தி உள்ளதாகவும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புதான் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தலுக்குப் பிறகுதான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம். அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று கூறும் பழனிசாமி, பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு தரப்படுமா என்பது பற்றி பேசவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தேர்தலுக்குப் பிறகுதான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.