தேர்தலுக்காக பணத்தை வாங்கிட்டாங்க… மீண்டும் மீண்டும் இந்தியாவை அவமதிக்கும் அமெரிக்க அதிபர்: பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என காங். கேள்வி

2 hours ago 1

வாஷிங்டன்: இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக, யுஎஸ் எய்டு அமைப்பு மூலம் வழங்கப்பட்டு வந்த ரூ.181 கோடி நிதியை நிறுத்துவதாக எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் குழு சமீபத்தில் அறிவித்தது. இது இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிதியே இந்தியாவுக்கு தரப்படவில்லை என அமெரிக்க பத்திரிகை வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிதியை தேர்தல் ஆணையம் பெற்றதா, ஒன்றிய அரசு பெற்றதா அல்லது வேறு யார் பெற்றார்கள் என்பதே யாருக்கும் தெரியவில்லை.

ஆனாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை அவமதிக்கும் வகையில் தினந்தோறும் இதைப் பற்றி பேசி வருகிறார். வாஷிங்டனில் நேற்று நடந்த கன்சர்வேடிவ் அரசியல் மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘முன்னாள் அதிபர் பைடன் நிர்வாகம் இந்தியாவில் தேர்தல்களுக்கு உதவுவதற்காக 18 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக ஒதுக்கி உள்ளார். இது எதற்கு? அவர்களுக்கு பணமே தேவையில்லை. அவர்களிடமே நிறைய இருக்கிறது. இந்தியா நம்மை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறது. உலகிலேயே மிக அதிக வரி விதிக்கும் நாடுகளுள் ஒன்று இந்தியா. எங்களிடம் 200 சதவீதம் வரி விதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தேர்தலுக்கு உதவ நாம் பணத்தை தருகிறோம்’’ என்றார்.

அதிபர் டிரம்ப் இந்தியாவை இவ்வாறு விமர்சிப்பது கிட்டத்தட்ட 5வது முறையாகும். இதற்கிடையே, பொய்யான குற்றச்சாட்டில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் ஆகியோர் இந்தியாவை மீண்டும் மீண்டும் அவமதிக்கும் போது பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமைதி காப்பது ஏன் காங்கிரஸ் கேள்வி கேட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘பாஜ என்பது பொய்யர்கள், படிப்பறிவில்லாதவர்கள் கூடாரம். இந்தியாவில் தேர்தலுக்காக அமெரிக்கா நிதி உதவி செய்தது என்ற செய்தி பொய்யானது. அது வங்கதேசத்திற்கு வழங்கப்பட்ட நிதி. எலான் மஸ்க் போலி தகவலை கூறி உள்ளார். டாக்காவிற்கும், டெல்லிக்கும் வித்தியாசம் தெரியாமல் டிரம்ப் குழப்பிக் கொண்டுள்ளார். அதை அமித் மால்வியா இட்டுகட்டி பரப்பி விட்டுள்ளார்.

இந்தியாவுக்கே வராத பணத்தை ரத்து செய்து விட்டதாக அவர்கள் கூறுகிறார். அதை வைத்து இந்தியாவை தொடர்ந்து அவமதிக்கிறார்கள். இதற்காக பண பரிவர்த்தனை குறித்த அனைத்து புள்ளிவிவரங்களும் உள்ளன. அமெரிக்காவிலிருந்து போலிச் செய்திகளைப் பரப்புவதன் மூலம் பாஜ ஏன் தேச விரோதச் செயல்களை செய்கிறது? இது குறித்து பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் பதிலளிக்க வேண்டும். இனியும் இந்திய அரசு ஏன் இதில் அமைதியாக இருக்கிறது? அதானிக்காக நாட்டின் சுயமரியாதை சமரசம் செய்யப்பட்டுள்ளதா?’’ என கேள்வி கேட்டுள்ளார்.

* தேர்தலுக்காக நிதி வரவில்லை ஒன்றிய அரசு அறிக்கை

ஒன்றிய நிதி அமைச்சகத்தின் சமீபத்திய வருடாந்திர அறிக்கையில், 2023-24ம் நிதியாண்டில், ரூ.6500 கோடி மதிப்பில் இந்தியாவில் 7 திட்டங்களுக்கு யுஎஸ் எய்டு அமைப்பு மூலம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு, ரூ.825 கோடி நிதி உதவி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தேர்தலுக்காகவோ வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவோ எந்த நிதியும் பெறப்பட்டதாக தகவல் இல்லை. 7 திட்டங்களும் விவசாயம், உணவு பாதுகாப்பு, குடிநீர், சுகாதாரம், சுத்தம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

கவலை அளிக்கிறது

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘நல்ல எண்ணத்துடன் தான் யுஎஸ் எய்டு நிதி உதவி இந்தியாவில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் அதில் தீய எண்ணம் இருப்பது தொடர்பான டிரம்ப் நிர்வாகம் அளிக்கும் தகவல்கள் கவலை அளிக்கிறது. இது நிச்சயமாக கவனிக்க வேண்டிய விஷயம். இதில் சம்மந்தப்பட்டவர்களை நாடு அறிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

ரூ.181 கோடியா? ரூ.156 கோடியா? டிரம்ப் குழப்பம்

இதுவரை இந்தியாவுக்கு ரூ.181 கோடி (21 மில்லியன் டாலர்) நிதி கொடுத்ததாக கூறி வந்த அதிபர் டிரம்ப் நேற்று பேசுகையில் ரூ.156 கோடி (18 மில்லியன் டாலர்) என தொகையை குறைத்து குறிப்பிட்டார். இதனால் இந்த விஷயத்தில் அவர் குழம்பிப் போயிருப்பது தெளிவாகிறது.

 

The post தேர்தலுக்காக பணத்தை வாங்கிட்டாங்க… மீண்டும் மீண்டும் இந்தியாவை அவமதிக்கும் அமெரிக்க அதிபர்: பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என காங். கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article