தேமுதிகவில் இருந்து 2 மாஜி எம்எல்ஏக்கள் விலகல்?.. பிரேமலதாவுக்கு பரபரப்பு கடிதம்

12 hours ago 2


சென்னை: உயர்மட்ட குழு உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்காவிட்டால் தேமுதிகவில் இருந்து விலகுவேன் என்று முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி பிரேமலதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதே போல முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசனும் தேமுதிகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேமுதிக இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வந்தார் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி. இந்த நிலையில் கடந்த 30ம் தேதி தர்மபுரியில் நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டார். நல்லத்தம்பிக்கு தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

தன்னிடம் இருந்த இளைஞர் அணி செயலாளர் பதவி பறிக்கப்பட்டதால் நல்லதம்பி கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நல்லத்தம்பி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தேமுதிகவின் உண்மை விசுவாசி ஆகிய நான் தலைவர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டவன். நான் என்றென்றும் விஜயகாந்துக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தேமுதிகவிற்கும் என்றும் நன்றியுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன். விஜய பிரபாகரன் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும். நான் மன்றத்திலும் கட்சியிலும் என்னால் முடிந்தவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பான முறையில் தங்களிடம் கெட்ட பெயர் வாங்காமல் இயக்கத்திற்காகவும் விஜயகாந்தின் குடும்பத்திற்காகவும் என்னால் முடிந்த வரை செயல்பட்டு வருகிறேன்.

மேலும் தர்மபுரியில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் நாம் எல்லாம் நீண்ட நாள் எதிர்பார்த்த விஜய பிரபாகரனுக்கு தேமுதிக இளைஞரணி செயலாளராக அறிவித்தமைக்கு என்னுடைய உளமாற வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தம்பியின் குரல் தமிழக சட்டப் பேரவையில் விஜயகாந்தின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழ்த்தி மகிழ்கிறேன். மன்னித்து விடுங்கள். எனவே எங்களின் பிரேமலதா கவனத்திற்கு அறிந்தோ அறியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்திலிருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை. என்றைக்கும் நான் கட்சியின் கடைகோடி தொண்டன் என்பதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 30ம் தேதி அன்று வெளியிட்ட தேமுதிக அறிவிப்பில் எனக்கு கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி விடுவிக்காத பட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் எந்தவித மன வருத்தத்திலும் கூறவில்லை மன மகிழ்ச்சியோடுதான் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதே போல முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசனும் தேமுதிகவில் இருந்து விலகுவதாக தேமுதிக பொதுச்செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். 2 முன்னாள் எம்எல்ஏக்களும் பிரேமலதாவுக்கு கடிதம் எழுதியுள்ளது தேமுதிகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தேமுதிகவில் இருந்து 2 மாஜி எம்எல்ஏக்கள் விலகல்?.. பிரேமலதாவுக்கு பரபரப்பு கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article