தேமுதிக சார்பில் யார் மாநிலங்களவை செல்ல உள்ளார் என்பதை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்போம் : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

3 hours ago 2

அண்ணாநகர்: இன்று தேமுதிக கொடி நாள் வெள்ளி விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிகொடி ஏற்றினார். உறுதி மொழியை பிரேமலதா விஜயகாந்த் வாசிக்க, கட்சி தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சியில், தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி, விஜய பிரபாகரன், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், பிரேமலதா விஜயகாந்த், பொதுமக்களுக்கு சேலை-வேட்டி, அன்னதானம் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தேமுதிக கொடி அறிவிக்கப்பட்ட நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு ஒரு பொதுகூட்டம் நடத்த அறிவித்திருக்கிறோம். கூட்டணி அமைத்தபோதே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டதுதான் ராஜ்யசபா பதவி. ராஜ்யசபா தேர்வுக்கான நாள் வரும்போது தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். விஜய்யுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா என்பதை விஜயிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் 20 வருட கட்சி, இந்த கேள்வியை எங்களிடம் கேட்கக்கூடாது. ஏற்கனவே நாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.

அதிமுகவின் உட்கட்சி பிரச்னை தொடர்பான கருத்துக்களை கூற நான் விரும்பவில்லை. ஜெயக்குமார் ஒரு கருத்தும், செங்கோட்டையன் ஒரு கருத்தும் கூறுகிறார்கள். இதில் எது உண்மை, பொய் என்பதை அதிமுகவிடம்தான் கேட்க வேண்டும். 2026ல் தேமுதிக இருக்கும் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். முதல்வர் மருந்தகம் திட்டம் வரவேற்கத்தக்கது. விஜய் அரசியலில் எடுபடுவாரா? இல்லையா என்பதை நான் சொல்ல முடியாது. அவரின் செயல்பாடுகளை பொருத்துதான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தேமுதிக சார்பில் யார் மாநிலங்களவை செல்ல உள்ளார் என்பதை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்போம் : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article