தேனீ வளர்ப்பு டூ காளான் வளர்ப்பு!

4 hours ago 3

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் இன்று பல பெண்கள் குறிப்பிடும்படியான சாதனை
களைச் செய்து வருகிறார்கள். அதேபோல விவசாயம் சார்ந்த சில துணைத்தொழில்களிலும் முத்திரை பதித்து வரும் மகளிரை நாம் கண்டு வருகிறோம். மதுரை திருமங்கலம் அருகே உள்ள ஊராண்ட உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவஜோதியும் அந்த வரிசையில் இடம் பிடிக்கிறார். தேனீ வளர்ப்பில் தொடங்கி, காளான் வளர்ப்பு, மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு என ஒவ்வொரு படியாக சாதித்து வரும் இவரின் சுவாரஸ்யக் கதையைப் பற்றித் தெரிந்துகொள்ள மதுரைக்குச் சென்றோம். தனது கிராமத்தில் காளான் கொட்டகைக்குள் அறுவடைப்பணியில் தீவிரமாக இருந்தபோதும் நம்மை வரவேற்றுப் பேச ஆரம்பித்தார் சிவஜோதி. “கொரோனா காலத்திற்கு முன்பு எங்கள் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் தேனீ வளர்ப்பு பற்றி தெரியவந்தது. அதனை முழுமையாக தெரிந்துகொள்வதற்கு எங்கள் பகுதியில் தேனீ வளர்ப்பு சார்ந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன். பின்பு தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்தேன். அதைத் தொடர்ந்து யூடியூபில் காளான் வளர்ப்பு சார்ந்த வீடியோக்கள் பார்த்ததால் காளான் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அதனால் காளான் வளர்ப்பு சார்ந்த பயிற்சி வகுப்பிலும் கலந்துகொண்டேன். அதை வைத்து கடந்த இரண்டு வருடங்களாக காளான் வளர்த்து விற்பனை செய்து வருகிறேன்.

நான் வளர்ப்பது சிப்பிக்காளான். பொதுவாக காளான் வளர்ப்பதற்கு அடிப்படையான விசயம் சீதோஷ்ண நிலைதான். கோடை மற்றும் மழைக்காலங்களில் இந்தக் காளானை வளர்க்கலாம். காளான் வளர்க்கும் கொட்டகைக்குள் 18 முதல் 24 டிகிரி வெப்பநிலையைக் கடைபிடித்தாலே போதும். காளான் சிறப்பாக வளரும். அதுபோக, காளான் விதைகள், வைக்கோல், பிளாஸ்டிக் பை தேவைப்படும். பிளாஸ்டிக் பைக்குள் வைக்கோல் மற்றும் காளான் விதைகளை வைத்தால் காளான் வளரத் தொடங்கிவிடும். அதாவது, வைக்கோலை 14 மணிநேரம் நீரில் முக்கி வைத்து அதன்பின் வெளியே எடுக்க வேண்டும். வைக்கோல் நன்கு உலரும் வரை நிழலில் வைத்து வைக்கோலின் ஈரப்பதம் குறைந்த பின்பு, அதனை பிளாஸ்டிக் பைக்குள் வைத்து காளான் படுக்கை தயார் செய்ய வேண்டும். வைக்கோலையும் விதையையும் பிளாஸ்டிக் பைக்குள் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து படுக்கையை தயார் செய்து காளான் வளர்க்கும் கொட்டகைக்குள் தொங்கவிட வேண்டும். ஒரு படுக்கைக்குள் 5 கிலோ வைக்கோல் இருக்க வேண்டும். இப்படி கொட்டகைக்குள் வைத்து வளர்க்கப்படுகிற காளான் படுக்கையில் இருந்து 18வது நாள் காளான் வளரத் தொடங்கிவிடும்.

நான் தற்போது இரண்டு கொட்டகைக்குள் காளான் வளர்த்து வருகிறேன். ஒரே நேரத்தில் அனைத்து காளான் படுக்கைகளையும் தயார் செய்ய மாட்டேன். ஒரு நாளைக்கு 5 முதல் 8 படுக்கைகளை தயார் செய்து கொட்டகைக்குள் வைப்பேன். ஒரு நாளில் படுக்கை தயாரிப்பது போலவே காளான் அறுவடையும் செய்வேன். இன்று தயார் செய்யப்படும் காளான் படுக்கையில் இருந்து 18வது நாளில் காளான் அறுவடை செய்யலாம். ஒரே நேரத்தில் அனைத்து படுக்கைகளையும் தயார் செய்தால் அனைத்து படுக்கைகளில் இருந்தும் ஒரே நேரத்தில் காளான் அறுவடைக்கு வரும். அதனால் 18 நாளும் குறைந்த அளவில் படுக்கை தயாரிப்பது, 18 நாளும் அறுவடை எடுப்பது என செய்து வருகிறேன். இந்த வகையில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 4 கிலோ காளான் கிடைக்கும். 200 கிராம் காளானை ரூ.40க்கு விற்பனை செய்து வருகிறேன். சராசரியாக ஒரு நாளைக்கு நான் வேலைக்குச் சென்றால் என்ன ஊதியம் பெறுவேனோ அதை சொந்த உழைப்பில் செய்து வருகிறேன். காளான் வளர்ப்பிற்கு மானியம் பெறுவது, காளானை எப்படி சந்தைப்படுத்துவது? என்பது குறித்து எனக்கு தெரியப்படுத்தியது எங்கள் பகுதியில் உள்ள கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தைச் சேர்ந்த சுப்புராஜன் சார் தான். நான் விளைவிக்கிற காளானை எங்கள் பகுதியில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டிற்கு நேரடியாக விற்பனை செய்கிறேன்’’ என்கிறார் சிவஜோதி.
தொடர்புக்கு:
சிவஜோதி: 99439 58404.

18 வகை ஊறுகாய்

காளான் வளர்ப்பு போக விருப்பத் தொழிலாக ஊறுகாய் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் சிவஜோதி கறிவேப்பிலை, பிரண்டை, காளான், வாழைப்பூ தொடங்கி சிக்கன், இறால், மீன், கருவாடு என 18 வகையான ஊறுகாய்கள் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் ஊறுகாய்களை இவரது கணவர் வெளியூர்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கிறார்.

 

The post தேனீ வளர்ப்பு டூ காளான் வளர்ப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article