இல்லத்தரசிகள் மற்றும் குறைந்த அளவில் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு விவசாயம் மூலம் ஒரு நல்ல வருமானம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், அவர்களுக்கு போதிய அனுபவம் இல்லாததால், அந்தக் கனவு பகல் கனவாகவே இருக்கும். ஆனால், தேனீ வளர்ப்பைப் பொருத்தவரை பெரிய அளவு விவசாய நிலமோ, பெரிய அனுபவமோ தேவை இல்லை. ஆர்வம் மட்டும் இருந்தாலே போதும் தேனீக்கள் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம். இதற்கு உதாரணமாக விளங்குகிறார் தர்மபுரியைச் சேர்ந்த மணிமாறன். தர்மபுரியில் இருந்து சரியாக 8 கி.மீ தொலைவில் இருக்கிறது வெள்ளாளப்பட்டி என்னும் அழகிய கிராமம். அந்த ஊரில் உள்ள காமராஜ் நகரில் இருக்கிறது மணிமாறனின் எளிமையான வீடு. கல்லூரியில் பிஎஸ்சி தாவரவியல் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மணிமாறன், அவரது தோட்டத்தில் தேனீப் பெட்டிகளை வைத்து தேனீ வளர்த்து வருகிறார். விவசாயத்தில் இருக்கிற ஆர்வத்தில் படித்துக்கொண்டே ஒன்றரை வருடமாக தேனீ வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார். தேன் பெட்டிகள் நிறைந்த அந்தத் தோட்டத்தில் மணிமாறனை சந்தித்தோம்.
“ நெல், காய்கறிகள் என எங்கள் ஊரில் தொடர்ச்சியாக ஏதாவது சாகுபடி நடந்தபடி இருக்கும். இங்கு நான்தான் முதல்முதலாக தேனீ வளர்ப்பைத் தொடங்கி இருக்கிறேன்’’ என பேசத் தொடங்கிய மணிமாறன் தொடர்ந்து பேசினார்.“ எங்களுக்குச் சொந்தமாக விவசாய நிலம் இருக்கிறது. அப்பா பாரம்பரிய விவசாயி. அதனால், இயற்கை முறை விவசாயம்தான் செய்து வருகிறார். அதனால், அவரைப் பார்த்து எனக்கும் விவசாயத்தின் மீது சிறுவயதில் இருந்தே ஆர்வம். விடுமுறை நாட்களில் அப்பாவோடு நானும் அவருக்குத் துணையாக விவசாய வேலைகள் செய்வேன். ஒருமுறை நாங்கள் சுத்தமான தேன் வேண்டுமென அலைந்து திரிந்தோம். ஆனால் அப்படி சுத்தமான தேன் கிடைக்கவே இல்லை. தூய்மையான கலப்படம் இல்லாத தேன் கிடைப்பதில்லையே, அத்தகைய தேனை நாமே உற்பத்தி செய்யலாமே என முடிவு எடுத்தேன். அந்தத் தேனை நம்மைப்போல நல்ல தேன் வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு விற்பனை செய்யலாம் என தீர்மானித்து தேனீ வளர்ப்பில் இறங்கி விட்டேன்.
தேனீ வளர்ப்பில் இறங்கியாகி விட்டது. ஆனால், தேனீ வளர்ப்பில் எனக்கு எந்த முன் அனுபவமும் கிடையாது. அதனால், சேலம் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற தேனீ வளர்ப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேனீ வளர்ப்பு பற்றி தெரிந்துகொண்டேன். மேலும், இணையதளத்தில் தேனீ வளர்ப்பு சார்ந்த வீடியோக்கள் பார்த்து தேனீக்களை வளர்க்கத் தொடங்கினேன்.முதற்கட்டமாக ஜவ்வாது மலையில் இருந்து ஒரு தேனீப்பெட்டி ரூ.2700 வீதம் 10 பெட்டிகள் வாங்கினேன். அதைத் தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் நண்பர்களின் மூலம் மேலும் சில தேனீப்பெட்டிகள் வாங்கினேன். தற்போது என்னிடம் மொத்தம் 80 தேனீ பெட்டிகள் இருக்கின்றன. இந்தத் தேனீப் பெட்டிகளின் மூலம்தான் தேன் சேகரித்து வருகிறேன். தேனீ பெட்டிகள் வாங்கும்போதே அந்தப் பெட்டிகளில் தேனீ இருக்கும். அதோடு தேன் சேகரிக்க வேண்டிய அடுக்குகளும் இருக்கும். இந்த தேனீ பெட்டியில் இருக்கிற தேனீக்கள் வெளிப்புறத்திற்கு சென்று தேன் எடுத்து வந்து இந்தப் பெட்டிக்குள் சேர்க்கும். அதற்காக பெட்டிகளை மரங்கள் மற்றும் பூக்கள் நிறைந்திருக்கும் இடங்களில் வைக்க வேண்டும். எனது தோட்டத்தில் மாமரம், தென்னை மரம், வாழை மரம் என பலதரப்பட்ட மரங்கள் இருப்பதால் நான் எனது தேனீ பெட்டிகளை எனது தோட்டத்தில் வைக்கிறேன். தேனீ பெட்டிகள் வைக்க வேண்டிய இடம் நிழலாக இருக்க வேண்டும். அப்போதுதான் தேனீக்கள் வளர தோதாக இருக்கும்.
தேனீ பெட்டிகளில் கீழே இருக்கிற ஓட்டைகளின் வழியாக தேனீக்கள் வெளியே சென்று தேன் எடுத்து வந்து சேகரிக்கும். இப்படி சேகரிக்கிற தேனை நாம் எடுத்து விற்பனை செய்து கொள்ளலாம். பெட்டியில் இருந்து தேன் எடுக்கும்போது மட்டும்தான் பெட்டியைத் திறக்க வேண்டும். தேனீ வளர்ப்புக்கு சீசன் எனப் பார்த்தால் ஜனவரி முதல் மே வரை நல்ல சீசன். அதாவது, எல்லா மரங்கள் மற்றும் செடிகளிலும் பூக்கள் வளரக்கூடிய பருவம்தான் நமக்கு சீசன். மற்ற மாதங்களில் அந்தளவிற்கு தேன் கிடைக்காவிட்டாலும் குறைந்தளவு தேன் கிடைக்கும். தேனீக்கள் தேனை பெட்டிகளுக்கு கொண்டுவரும்போது தேனீயின் கால்களில் இருக்கிற தேன் பெட்டிகளில் பட்டு, தேன் பெட்டி சேதமாக வாய்ப்பு உண்டு. அதனால், மழைக்காலங்களில் மட்டும் தேன் பெட்டியை சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல், பெட்டியில் இருந்து தேன் எடுக்கும்போது தேனீக்களுக்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் எடுக்க வேண்டும். இல்லையென்றால், கைகளில் கொட்டிவிடும். தேனீ வளர்ப்பதற்கு புதிதாக வருபவர்கள் பெட்டியில் இருந்து தேன் எடுக்கும்போது கைகளில் ஹேண்ட் க்ளவுஸ் போன்று ஏதாவது கையுறைகள் மாட்டிக்கொள்வது நல்லது.
ஒரு பெட்டியில் சராசரியாக 10 நாட்களில் தேனீக்கள் மூலம் தேன் சேர்ந்து விடும். ஆனால், எங்கள் பகுதி கொஞ்சம் வறட்சியான பகுதி என்பதால் நான் மாதத்திற்கு ஒரு முறைதான் தேன் எடுக்கிறேன். ஒரு பெட்டியில் இருந்து மட்டும் மாதம் 2.5 லிட்டர் தேன் கிடைக்கிறது. எப்படிப் பார்த்தாலும் மாதம் எனக்கு குறைந்தபட்சமாக 60 லிட்டர் தேன் கிடைக்கிறது. போதிய அளவுக்கு தேன் சேர்ந்த பிறகு தேன் அட்டைகளில் இருக்கும் தேனை இயந்திரத்தின் மூலம் பிரித்தெடுப்பேன். பிறகு அந்த தேன் அட்டைகளை பெட்டிக்குள்ளேயே வைத்து விடுகிறேன். குறைந்த முதலீட்டில் பெரியளவு அனுபவம் இல்லாமல் முறையாக செயல்பட்டு வந்தாலே போதும். தேன் வளர்ப்பில் வென்று விடலாம்’’
என்கிறார்.
தொடர்புக்கு:
மணிமாறன்: 73396 70127.
ஒரு மாதத்திற்கு 80 தேனீ பெட்டிகளில் இருந்து 60 லிட்டர் தேன் கிடைக்கிறது. ஒரு லிட்டர் ரூ.700க்கு விற்பனை செய்வதன் மூலம் சராசரியாக மாதம் ரூ.40 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. தேன் ஊற்றி வைக்கும் பாட்டிலுக்கென்று மாதம் 10 ஆயிரம் செலவு வந்தால் கூட மீதம் 30 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. தேனீப்பெட்டிகள் வாங்குவதற்கு தேவைப்படும் முதலீடு தனி.
தேனீப்பெட்டியை நிழல் பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அதேபோல் எறும்புகள் மொய்க்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் தேனீ பெட்டியை மண்ணில் இருந்து 2 அடி உயரத்தில் வைக்க வேண்டும். அதேபோல், தேன் பெட்டிகள் வைக்கப்பட்ட இடத்தின் கீழே பழைய என்ஜின் ஆயிலை ஊற்றி வைத்தால் எறும்புகள் தேனீப் பெட்டிகளின் மீது ஏறாது.
The post தேனீ வளர்ப்பில் மாதம் ரூ.30 ஆயிரம்… appeared first on Dinakaran.