தேனி: தேனி நகரின் நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேனி நகரில் பெரியகுளம் சாலை, மதுரை சாலை மற்றும் கம்பம் சாலைகள் முக்கிய சாலைகளாக உள்ளன. இந்தச் சாலைகளில் எப்போதும் போக்குவரத்து அதிகமாகக் காணப்படும். இதில் மதுரை மற்றும் கம்பம் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலமாகவும், தேனி நகர் பெரியகுளம் சாலையானது மாநில நெடுஞ்சாலைத்துறை மூலமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேனி நகர் பெரியகுளம் சாலையில் அல்லிநகரம் முதல் அன்னஞ்சி பிரிவு வரை சமீபகாலமாக இப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களது வளர்ப்பு மாடுகளை தங்களுக்கான மாட்டு கொட்டகையில் கட்டி வைப்பதில்லை. மேலும், மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதில்லை. இந்த மாடுகளை சாலைகளில் திரிய விடுகின்றனர். இதனால் மாடுகள் கூட்டம், கூட்டமாக அல்லிநகரம் முதல் அன்னஞ்சி வரையிலான மாநில நெடுஞ்சாலையினை அடைத்தபடி சாலையோரம் கிடக்கும் கழிவுகளை உண்டு திரிகின்றன.
இதில் சாலைகளில் கூட்டம், கூட்டமாக திரியும் மாடுகள், திடீரென சண்டையிட்டு அங்கும், இங்குமாக ஓடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் சில நேரங்களில் மாடுகள் சாலைகளில் படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டியது. மேலும் மாடுகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடும் போது வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றனர்.
அத்துடன் சாலைகளில் செல்லும் சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் தயக்கத்துடன் செல்கின்றனர்.
எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுத்து, மாடு வளர்ப்போருக்கு உரிய எச்சரிக்கைகளை வழங்கி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தேனி நகர சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.