தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி முதல் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் விநியோகம்: இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

3 weeks ago 4

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம், அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை அறிவித்தது. அதன்படி, கடந்த ஆகஸ்டு 20-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். அதன் பிறகு, அக்டோபர் 29-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 28-ம் தேதி வரை பெறப்பட்டது.

இந்த காலகட்டத்தில் கடந்த நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த 4 நாட்கள் முகாமிலும், பெயர் சேர்க்க 8,38,016 விண்ணப்பங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க 4 விண்ணப்பங்கள், ஆதார் இணைப்புக்கு 783 விண்ணப்பங்கள், பெயர் நீக்கம் செய்ய 1,19,701 விண்ணப்பங்கள், திருத்தம் மேற்கொள்ள 4,42,111 விண்ணப்பங்கள் என மொத்தம் 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுதவிர, தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரிகளிடம் நேரிலும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த வகையில் கடந்த அக்டோபர் 29 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மற்றும் நேரில் 17 லட்சத்து 70 ஆயிரத்து 901 விண்ணப்பங்கள், ஆன்லைன் வாயிலாக 5 லட்சத்து 38 ஆயிரத்து 490 விண்ணப்பங்கள் என மொத்தம் 23 லட்சத்து 9 ஆயிரத்து 391 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், பெயர் சேர்க்க மட்டும் ஆன்லைனில் 1,08,872 விண்ணப்பங்கள், நேரடியாக 9,22,372 விண்ணப்பங்கள், பெயர் நீக்க ஆன்லைனில் 2,69,200 விண்ணப்பங்கள், நேரடியாக 2,81,915 விண்ணப்பங்கள், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய ஆன்லைனில் 1,60,372 விண்ணப்பங்கள், நேரடியாக 5,66,605 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களின் பரிசீலனை நவம்பர் 29-ம் தேதி முதல் கடந்த 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. வருகிற ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன்பின் புதிய வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி முதல் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

The post தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி முதல் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் விநியோகம்: இந்திய தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article