
புதுடெல்லி,
தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ராவின் பதவி காலம் கடந்த ஜூன் 1-ந்தேதியுடன் முடிவடைந்தது.
எனவே தேசிய மனித உரிமை ஆணைய புதிய தலைவராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று பிறப்பித்தார். தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். மன்னார்குடியில் பிறந்தவர்.
சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிய இவர், 2006ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியபோது பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர். பின்னர் தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஐகோர்ட்டிற்கு மாற்றப்பட்ட அவர், இமாச்சல் மாநில ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2019ல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
தன் பதவிக்காலத்தில் பல்வேறு சிறப்பான தீர்ப்புகளை வழங்கியதாக, பாராட்டுக்களை பெற்றவர் நீதிபதி ராமசுப்பிரமணியன். அவர் பணி ஓய்வு பெற்ற நிலையில், தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக தற்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.