விருதுநகர்: தேசிய பேரிடர் நிதி ரூ.1,173 கோடி பாக்கி ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. புயல் நிவாரணத்துக்காக ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தரவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒன்றிய அரசு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கான தனது பங்கான ரூ.944 கோடியை தமிழ்நாட்டிற்கு விடுவித்துள்ளது.
இந்த நிதியானது, பெஞ்சல் புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய அரசால் அனைத்து மாநிலங்களுக்கும் 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியாகும். கடந்த 3 ஆண்டுகளில், ஒன்றிய அரசு விடுவித்துள்ள 75 சதவீத பங்கு மற்றும் அதற்கான மாநில அரசின் 25 சதவீத பங்கு குறித்த விவரங்கள் பின்வருமாறு:
2021-22ம் ஆண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான மொத்த தொகை ரூ.1,088 கோடியில், ஒன்றிய அரசினுடைய 75 சதவீத பங்கு தொகை ரூ.816 கோடி மற்றும் மாநில அரசினுடைய 25 சதவீத பங்குத்தொகை ரூ.272 கோடி என ஆக மொத்தம் ரூ.1,088 கோடியில், ஒன்றிய அரசு விடுவித்த தொகை ரூ.816 கோடி. 2022-23ம் ஆண்டில் ஒன்றிய அரசினுடைய 75 சதவீத பங்குத்தொகை ரூ.856.50 கோடி மற்றும் மாநில அரசினுடைய 25 சதவீத பங்குத்தொகை ரூ.285.50 கோடி என ஆக மொத்தம் ரூ.1142 கோடியில், ஒன்றிய அரசு விடுவித்து இருக்கக்கூடிய தொகை ரூ.856.50 கோடி.
2023-24ம் ஆண்டில் ஒன்றிய அரசினுடைய 75 சதவீத பங்குத்தொகை ரூ.900 கோடி மற்றும் மாநில அரசினுடைய 25 சதவீத பங்குத்தொகை ரூ.300 கோடி என மொத்தம் ரூ.1,200 கோடியில், ஒன்றிய அரசு விடுவித்து இருக்கக்கூடிய தொகை ரூ.900 கோடி. இந்த வரிசையில் நடப்பாண்டு 2024- 25ம் ஆண்டு ஒன்றிய அரசு மாநில பேரிடர் மேலாண்மை நிதிக்காக கொடுக்க வேண்டிய 75 சதவீத பங்குத்தொகை ரூ.945 கோடி மற்றும் மாநில அரசின் 25 சதவீத பங்குத்தொகை ரூ.315 கோடி ஆகும். இந்த ரூ.945 கோடி விடுவிக்க வேண்டிய தொகையில் தான், இப்பொழுது ஒன்றிய அரசு ரூ.944.80 கோடியை விடுவித்துள்ளது. மேலும் குறிப்பிட வேண்டுமென்றால், நடப்பு நிதியாண்டிற்கான முதல் தவணைத் தொகையின் விடுவிப்பு தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதி தற்போது டிசம்பர் மாதத்தில்தான் விடுவிக்கப்படுகிறது. தமிழ்நாடு, குறிப்பாக தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதியை அனுமதிக்கக் கோரியுள்ளது. தேசியப் பேரிடர் நிவாரண நிதியமானது, பேரிடர்களால் பாதிக்கப்படும் மாநிலங்களின் நிவாரணம் மற்றும் மீட்புத் தேவைகளுக்கான நிதியை நிறைவு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். கடந்த நிதியாண்டில், மிக்ஜாம் புயல் மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அதி கனமழைப் பொழிவு ஆகிய இரண்டு பேரிடர்கள் ஏற்பட்ட பின்னரே, மிகச் சொற்பமான ரூ.276 கோடியை, தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ், அதுவும் நான்கு மாத தாமதத்திற்குப் பின்னரே ஒன்றிய அரசு அனுமதித்தது. இது, மாநில அரசு கோரிய ரூ.37,906 கோடியில் ஒரு சதவீதம்கூட இல்லை.
தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் பெஞ்சல் புயலானது உயிரிழப்புகளையும், வாழ்வாதார பாதிப்புகளையும் பெருமளவில் ஏற்படுத்திச் சென்றுள்ளது. தற்காலிக மற்றும் நிரந்தர நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ரூ.6,675 கோடி தேவைப்படும் என ஆரம்ப கட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளது. பெஞ்சல் புயலானது ஏற்படுத்தியுள்ள பேரழிவுகளைக் குறிப்பிட்டு, நிதி விடுவிப்புக் கோரிக்கையினை தமிழக முதல்வர் அளித்துள்ள நிலையில், ஒன்றிய அரசு அலுவலர் குழு நேரடி ஆய்வும் மேற்கொண்டுள்ளது. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் இந்தத் துயர்மிக்க நேரத்தில், அவர்களை ஆதரிக்கும் வகையில் ஒன்றிய அரசானது தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
The post தேசிய பேரிடர் நிதியிலேயே ரூ.1,173 கோடி பாக்கி புயல் நிவாரணத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தரவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.