டேராடூன்: தேசிய பளு துாக்குதல் போட்டியில் வேலுார் வீரர் ஹாட்ரிக் செய்து சாதனை படைத்துள்ளார். தேசிய அளவிலான 38வது விளையாட்டுப் போட்டி உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடக்கிறது. அதில் பளு தூக்குதல் பிரிவில் தமிழ்நாடு சார்பில் வேலூரைச் சேர்ந்த என். அஜித் பங்கேற்றார். அவர் நேற்று முன்தினம் நடந்த 73கிலோ எடை பிரிவில் 2வது முயற்சியிலேயே மொத்தம் 311 கிலோ எடையை தூக்கி முதல் இடத்தை உறுதி செய்தார். அதனால் அவருக்கு 2வது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் சூழல் ஏற்படவில்லை. அதனால் தமிழ்நாட்டுக்கு ஒரு தங்கப்பதக்கத்தை வென்றார்.
அதன் மூலம் தேசிய அளவிலான பளு தூக்குதல் போட்டியில் ஹாட்ரிக் தங்கம் வென்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார். அஜித் ஏற்கனவே குஜராத், கோவாவில் நடந்த 36வது, 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த அஜித் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த பகுதியில் இருந்து ஏற்கனவே தமிழ்ச்செல்வம், சதீஷ் சிவலிங்கம் ஆகியோரும் தேசிய, சர்வதேச போட்டிகளில் கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post தேசிய பளு தூக்குதல் வேலூர் வீரர் அஜித் ஹாட்ரிக் சாதனை: 3வது முறை தங்கம் வென்றார் appeared first on Dinakaran.