சென்னை: தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் 3,5,8 ம் வகுப்பு மாணவர்களின் கல்வி தரம் நன்றாக உள்ளது என மாநில திட்டம் குழு மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், மாநில திட்டக்குழுவினால் தயாரிக்கப்பட்ட கற்றலில் இருக்கும் இடைவெளிகளை கண்டறிவது மற்றும் மாநில அளவிலான அடைவு அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
அதை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள மாநில திட்டக் குழு அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநில அளவிலான அடைவுத் தேர்வு – 2025 முடிவுகள் குறித்து தமிழ்நாடு திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:
தமிழக அரசு முதல்முறையாக தமிழக முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறக்கூடிய 45 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகளில் 3 , 5, 8 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. 2021ம் ஆண்டு ஒன்றிய அரசு எடுத்த சர்வே உடன் ஒப்பிடுகையில், தமிழகத்தின் சராசரி விகிதம் அதிகரித்துள்ளது.
வழக்கமாக இது போன்ற கற்றல் அடைவு திறன் ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே மேற்கொள்ளும், தமிழகத்தில் அரசு முதல் முறையாக இந்த ஆய்வை மேற்கொண்டது. மூன்று வகுப்புகளின் மாணவர்கள் கற்றல் அடைவு திறன் ஆய்வு மேற்கொண்டதில் தேசிய சராசரியை விட தமிழகத்தில் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. 3,5,8 வகுப்பு படிக்கும் குழந்தைகளில், 9 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் சர்வே எடுக்கப்பட்டது. அனைத்து குழந்தைகளையும் கணகெடுக்காவிட்டாலும், அனைத்து பள்ளிகளையும் கணக்கெடுத்துள்ளது. எதிர்பார்த்த தை விட மாணவர்கள் சிறப்பாக படிக்கின்றனர்.
8 ம் வகுப்பு மாணவர்கள், கணிதத்தில் பின் தங்கி உள்ளனர். இதை, கல்வித்துறை சரி் செய்யும். 8 ம் வகுப்பில், சமூக அறிவியல் பாடத்தில் சிறப்பாக உள்ளனர். எண்ணும் எழுத்தும் திட்டம் கை கொடுத்திருக்கிறது. நாங்கள் தற்போது சுட்டிக் காட்டி இருக்கக்கூடிய அம்சங்கள் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். குறைகளை சரி செய்து இருக்கிறார்களா என்பதை அறிய வேண்டுமென்றால் மீண்டும் சர்வே எடுக்க வேண்டும். எனவே அடுத்த ஆண்டும் நாங்கள் சர்வே எடுப்போம்.
தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் 3,5,8ம் வகுப்பு மாணவர்களின் கல்வி தரம் நன்றாக உள்ளது, மாநில திட்டம் குழு மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 45,924 பள்ளிகளில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் மேற்கொண்டு ஆய்வில் இந்த விவரங்கள் கிடைக்க பெற்று உள்ளது. தொடர்ந்து 3,5,8 வகுப்பு மாணவர்களின் கல்வித்திறன் குறைந்து வருகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனங்களை முன்வைத்து வரக்கூடிய நிலையில் தற்போது தமிழக மாணவர்களின் திறன் அதிகமாக இருப்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் 3,5,8ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் சிறப்பாக உள்ளது: மாநில திட்டக்குழு ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.