
சென்னை,
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 388 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 85 லட்சத்து 19 ஆயிரம் குடும்பங்களுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 1 கோடியே 9 லட்சம் பேருக்கு வேலை வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
2024-2025-ம் ஆண்டில் 20 கோடி நாட்கள் வேலை வழங்க மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டது. இதுவரை 28 கோடியே 45 லட்சம் நாட்கள் வேலை வழங்கப்பட்டு உள்ளது. இது 142 சதவீத சாதனையாகும். மொத்த பணியாளர்களில் பெண்கள் 86 சதவீதமும், ஆதிதிராவிடர் வகுப்பினர் 27 சதவீதமும், பழங்குடியினர் 1.63 சதவீதமும் உள்ளனர். மக்கள்தொகையின் அடிப்படையில் மேற்கண்ட வகுப்பினரின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.
ஊரக பகுதிகளில் உள்ள மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு இந்த திட்டம் பெரும் பங்களிப்பை வழங்குகிறது. ஆனால் மத்திய அரசு திட்டத்துக்கு நிதியை விடுவிப்பதில் தாமதம் செய்கிறது. இதனால் திட்ட பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போதைய நிலையில் திட்ட பணியாளர்களுக்கான ஊதிய நிலுவை ரூ.2,400 கோடியாகவும், திட்டத்தில் கட்டப்படும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நிலுவை ரூ.852 கோடியாகவும் உள்ளது.
எனவே நிலுவையில் உள்ள ரூ.3,252 கோடி திட்ட நிதியை விடுவிக்கக்கோரி தமிழக முதல்-அமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் தமிழ்நாடு நிதி அமைச்சர், மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரியை நேரில் சந்தித்து நிலுவையில் உள்ள நிதியை விரைவில் விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி நிதியை விடுவிக்க வேண்டும். அந்த நிதி பெறப்பட்டதும் பணியாளர்களின் நிலுவை ஊதியம், அவர்களின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.