ரோட்டில் தோழியுடன் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

4 hours ago 1

கோவை,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த 27 வயதான பெண், கோவை கணபதி மாநகரில் தங்கி ஒரு அழகு நிலையத்தில் அழகு கலை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவருடைய கணவர் திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அந்த பெண், வேலை முடிந்து அழகு நிலையத்தில் இருந்து வீடடிற்கு புறப்பட்டார். அப்போது அவர், தனது தோழியுடன் ஓட்டலுக்கு சென்று உணவு வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த வாலிபர், அழகு கலை பெண் ஊழியரிடம், முகவரி கேட்பது போல் பேச்சுக் கொடுத்தார். பின்னர் அவர் திடீரென்று அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதை பார்த்ததும் அந்த வாலிபர் தனது ஸ்கூட்டரில் தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகன் ஜெகதீஸ்வரன் என்பதும், அவர் கோவை- சத்திசாலை எல்.ஜி.நகரில் குடியிருந்து வருவதும் தெரிய வந்தது. உடனே போலீசார் ஜெகதீஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Read Entire Article