தேசிய அளவில் கராத்தேயில் தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவி!

3 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

பஞ்சாப்பில் நடந்த 68வது தேசிய அளவிலான தேசிய பள்ளிக்கல்வி குழும விளையாட்டுப் போட்டிகளில் கராத்தே போட்டியில் 46 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார் நித்திலா. இதுவரை நடந்த தேசிய பள்ளிக்கல்வி குழும விளையாட்டுப் போட்டியில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி பள்ளி, சிஐஎஸ்சிஇ பள்ளி மாணவர்கள்தான் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்கள். முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவி வெற்றி பெற்றிருக்கிறார்.

‘‘நான் சென்னையில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில ஆறாம் வகுப்பு படிக்கிறேன். என் அப்பா ஒரு கராத்தே மாஸ்டர். அதனால் நானும் கராத்தே பயில வேண்டும் என்று அப்பா விரும்பினார். அதனால் சின்ன வயசிலே என்னை கராத்தே பயிற்சிக்காக ஒரு மாஸ்டரிடம் சேர்த்து விட்டார்.

தினமும் பள்ளிக்கூடம் முடிஞ்சதும், நான் கராத்தே பயிற்சிக்கு போயிடுவேன். நான் கராத்தே கற்றுக் கொள்வதால், என் நண்பர்கள் எல்லோரும் கராத்தே கற்றுக் கொண்டு எல்லோரையும் அடிப்பியான்னு கிண்டல் செய்வாங்க. கராத்தே பயில்வது மற்றவரை தாக்குவதற்காக அல்ல. அது ஒரு தற்காப்புக் கலை. ஆபத்து சமயத்தில் என்னை பாதுகாப்பதற்காகத்தான் என அவர்களுக்கு சொல்லி புரிய வைப்பேன். என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கராத்தே பற்றி எடுத்து சொல்வேன்.

அப்பா கராத்தே மாஸ்டர் என்பதால் அவருக்கு இந்தக் கலையினை பெண்களும் பயில வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதனால்தான் அவர் நான் இதை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். முதலில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலும், பயிற்சி எடுக்க எடுக்க எனக்கு அந்தக் கலை மேல் அளவு கடந்த விருப்பம் ஏற்பட துவங்கியது. ஐந்து வயதில் இருந்தே கராத்தே போட்டியில் பங்கு பெற துவங்கினேன். நான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டிக்கும் அப்பா உடன் வருவார். உடன் இருந்து உற்சாகப்படுத்துவார். நான் வெற்றிப் பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் தட்டிக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்துவார்.

அவர் எனக்கு கொடுத்த அந்த ஊக்கம்தான் என்னை மேலும் ெவற்றிப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் தூண்டியது. அதனால் கராத்தே சம்பந்தமான நுணுக்கங்கள் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். மிகவும் தீவிரமாக விளையாட துவங்கினேன். கராத்தேவில் சாதனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். தீவிரமாக பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன்.

அந்த கடும் உழைப்பு அடுத்தடுத்து பங்கு பெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற செய்தது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி வாகை சூடினேன். அதனைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டேன். அந்தப் போட்டி பஞ்சாப்பில் நடந்தது. இந்திய அளவில் நடந்த அந்தப் போட்டியில் 46 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றேன். அடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிப் பெற வேண்டும்’’ என்கிறார் நித்திலா.

பல வருடங்களாக கராத்தே பற்றிய நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து, நித்திலாவை ஒரு போட்டியாளராக மாற்றி தேசிய அளவில் வெற்றிப் பெற வைத்ததில் முக்கிய பங்கு அவரின் தந்தையான சம்பத்தையே சாறும். அரசுப் பள்ளியில் தற்காலிகமாக வேலை செய்து வரும் இவர் இது குறித்து பேசிய போது, ‘‘எனக்கு சண்டைக் காட்சிகள் கொண்ட படங்கள் பார்க்க பிடிக்கும். அதுதான் எனக்குள் கராத்தே மேல் ஈடுபாட்டினை ஏற்பட செய்தது.

11ம் வகுப்பு படிக்கும் போது கராத்தேக்கான பயிற்சி எடுக்க துவங்கினேன். சென்னைக்கு வந்து வேலையில் சேர்ந்த பிறகும் கிடைக்கும் நேரத்தில் கராத்தே சொல்லிக் கொடுத்து வந்தேன். எனக்கு எந்த ஒரு விஷயம் என்றாலும் அதனைப் பற்றிய புதிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். பள்ளியில் படிக்கும் போதும், பாடங்களை குறித்து நிறைய தகவல்களை தேடி தேடிப் படிப்பேன். அப்படித்தான் கராத்தே குறித்தும் நிறைய தெரிந்து கொண்டேன்’’ என்றவர் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார்.

‘‘அரசுப் பள்ளியில் சரியாக பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் என்று தான் பலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பல வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். முக்கியமாக சமூகத்தை புரிந்து கொள்வார்கள். ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லோரிடமும் பழகுவார்கள். என் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படித்தாலும், படிப்பை தாண்டி ஏதாவது ஒரு கலை தெரிய வேண்டும் என்றுதான் கராத்தே சொல்லிக் கொடுத்தேன்.

கராத்தே பயிற்சி எடுக்கும் போது காயம் ஏற்படும் என்று சொல்வார்கள். அது பரவாயில்லை. சங்கடங்களை சந்தித்தால்தான் அதை எதிர்கொள்ளக் கூடிய தைரியம் பிறக்கும். நித்திலாவிற்கு கராத்தே மேல் ஆர்வம் இருந்தது. கடுமையாக உழைத்தாள். சின்னப் போட்டிகளில் இருந்து மாநில அளவில் நடக்கக்கூடிய போட்டிகள் அனைத்திலும் வெற்றிப் பெறுவதற்காகவே கடுமையாக உழைப்பாள். அதன் பலன்தான் தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்றது. மேலும் அரசுப் பள்ளி மாணவி கராத்தேயில் வெற்றிப் பெறுவது இதுதான் முதல் முறை. இவளைப் பார்த்து அரசுப் பள்ளி மாணவிகள் இந்தக் கலைக்கான பயிற்சியில் ஈடுபடுவார்கள், போட்டியில் வெற்றிப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்றார் சம்பத்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

படங்கள்: கிருஷ்ணமூர்த்தி

The post தேசிய அளவில் கராத்தேயில் தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவி! appeared first on Dinakaran.

Read Entire Article