தெலுங்கு மக்களை விமர்சித்த ஆபாச நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது: தயாரிப்பாளரின் பண்ணை வீட்டில் பதுங்கியவரை சென்னை போலீஸ் தூக்கியது

2 months ago 6

சென்னை: தெலுங்கு மக்களை விமர்சனம் செய்த ஆபாச நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில், தயாரிப்பாளரின் பண்ணை வீட்டில் பதுங்கியிருந்தபோது, சென்னை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் அந்தப்புரத்துக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்று பேசினார். கஸ்தூரியின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அவர் உறுப்பினராக உள்ள பாஜவின் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சுதாகர்ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

அதேநேரத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடிகை கஸ்தூரி மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. தெலுங்கு மக்கள் போராட்டத்துக்கும் தயாராகினர். இதனால் பயந்துபோன நடிகை கஸ்தூரி, மன்னிப்பு கேட்பதாக கூறினார். ஆனால் அப்போது கூட, தான் பொதுவாக சொல்லவில்லை. குறிப்பிட்ட மக்களைத்தான் சொன்னேன் என்று மீண்டும் தெலுங்கு பேசும் மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில்தான் பேசினார். இந்தநிலையில், தெலுங்கு சங்கத்தினர் சென்னை எழும்பூர், மதுரை உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேநேரத்தில் கஸ்தூரி, முன் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், கஸ்தூரிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு சென்னையின் அடையாளமாக தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர். குறிப்பாக தான் வசித்த வடசென்னையில் பெருவாரியான மக்கள் வசிக்கின்றனர். அப்படி இருக்கும்போது தெலுங்கு மக்களை இழிவாக பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

தமிழக அரசும், அவர் பேசிய வீடியோவை நீதிமன்றத்தில் போட்டுக் காட்டி, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து கஸ்தூரியின் முன் ஜாமீன் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சென்னை மற்றும் மதுரை நகர போலீசார் சார்பில் கஸ்தூரியை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இரு நகர போலீசாரும் தனித்தனி படைகளுடன் கஸ்தூரியை தேடத் தொடங்கினர்.

இதனால் சென்னையில் இருந்த கஸ்தூரி, வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இதனால் அவரை தீவிரமாக தேடி வந்தபோது, அவர் ஆந்திரா மாநிலம் ஐதராபாத் நகரில் பஞ்சகுட்டா என்ற இடத்தில் சினிமா தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் என்பவரது பண்ணை வீட்டில் பதுங்கியிருப்பதாக சென்னை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்தனர். நேற்று இரவு அவர் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு தேடினர்.

போலீசார் வந்திருப்பதை தெரிந்ததும், கட்டிலுக்கு அடியில் போய் படுத்துக் கொண்டார். இதனால் வீட்டுக்குள் சென்று பெண் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வருகின்றனர். இன்று காலையில் அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசி வந்த நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளதற்கு பல்வேறு தெலுங்கு அமைப்புகள் வரவேற்றுள்ளன.

* திட்டிய தெலுங்கு மக்களிடம் பாதுகாப்பு கேட்ட கஸ்தூரி
தெலுங்கு மக்கள் குறித்து ஆபாசமாக பேசியதால் நடிகை கஸ்தூரி தலைமறைவானார். அவர் சென்னையில் வசித்தாலும் கடந்த சில மாதங்களாக அவர் ஐதராபாத்தில் தங்கி சினிமா வாய்ப்புகளை தேடி வந்தார். டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். இதற்காக ஐதராபாத்தில் வீடு எடுத்து தங்கியுள்ளார். அடிக்கடி சென்னைக்கும் வந்து செல்வார்.

இந்தநிலையில், தெலுங்கு மக்கள் குறித்து ஆபாசமாக பேசிய நடிகை கஸ்தூரி, தனக்கு பாதுகாப்பும், அடைக்கலமும் கேட்டு தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் தஞ்சம் அடைந்தார். தங்களை இழிவாக பேசிய கஸ்தூரிக்கு தெலுங்கு தயாரிப்பாளரே அடைக்கலம் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. எந்த மக்களை அவர் இழிவாக பேசினாரோ, அவர்களது இடத்திலேயே தங்கி, அவர் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு, அவர் பாதுகாப்பில் இருக்க வேண்டிய நிலைக்கு கஸ்தூரி தள்ளப்பட்டதுதான் காலத்தின் கோலம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

The post தெலுங்கு மக்களை விமர்சித்த ஆபாச நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது: தயாரிப்பாளரின் பண்ணை வீட்டில் பதுங்கியவரை சென்னை போலீஸ் தூக்கியது appeared first on Dinakaran.

Read Entire Article