தெலுங்கானாவில் நாளை முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்

2 months ago 13

ஐதராபாத்,

தெலுங்கானவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அங்கு ஆட்சியை பிடித்தது. தற்போது ரேவந்த் ரெட்டி முதல்-மந்திரியாக உள்ளார். சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தெலுங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது

இதனையடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தெலுங்கானா சட்டப்பேரவையில் கடந்த மாதம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், நாளை முதல் மாநிலம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது. என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் என்ற தகவல் அரசுத் தரப்பில் இன்னும் வெளியிடவில்லை. தெலுங்கானாவில் ஏற்கெனவே பிஆர்எஸ் தலைமையிலான ஆட்சியில் 2014ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பு 2-வது சாதி வாரி கணக்கெடுப்பாகும்.

தற்போதைய கணக்கெடுப்பு பணியில் 48,000 பள்ளி ஆசிரியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதால், தொடக்கப் பள்ளிகளுக்கு இந்த மாதம் அரைநாள் மட்டுமே வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 85,000 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி வீட்டின் கதவில் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பணியானது, நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, அதன் அறிக்கைகள் பொதுத் தளத்தில் பதிவேற்றப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் இடஒதுக்கீடு பலன்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, சொத்துப்பகிர்வு உள்ளிட்ட தகவல்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கண்காணிப்பு பொறுப்பாளராக ருத்ர சந்தோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகத்துக்கு பிறகு இரண்டாவது மாநிலமாக தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article