தெலங்கானாவில் இருந்து திருவாரூருக்கு 400 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 பேர் ஓட்டலில் சிக்கினர்

2 hours ago 1

திருவாரூர்: தெலங்கானாவில் இருந்து திருவாரூருக்கு 2 கார்களில் கடத்தி வந்த 400 கிலோ கஞ்சாவுடன் 5 பேரை ஓட்டலில் வைத்து போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கஞ்சாவை வாங்க வந்தவர் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார். அவர்களிடமிருந்து கஞ்சா, 3 கார்கள், 5 செல்போன்களை கைப்பற்றி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு 2 கார்களில் பல லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சா கடத்தி வருவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தெலங்கானாவில் இருந்து கஞ்சா கடத்தி கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்த 2 காரை போலீசார் பின்தொடர்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை திருவாரூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஓட்டலுக்குள் 2 கார் சென்றது. இதையடுத்து ஓட்டலுக்குள் போலீசார் சென்று காரில் இருந்த 5 ேபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் கார்களில் சோதனை நடத்தியபோது அட்டை பெட்டிகளில் 400 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டலில் உள்ள தனி அறையில் வைத்து 5 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். அதில், தெலங்கானாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாகவும், திருவாரூரில் வந்து ஒருவர் கஞ்சாவை வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார். அந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியாது என்று 5 பேரும் கூறினர்.

இதையடுத்து ஓட்டலுக்கு வெளியே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் ஓட்டலுக்குள் தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஒரு கார் வந்தது. இதையடுத்து ஓட்டல் கேட்டை போலீசார் இழுத்து மூடினர். காரில் வந்த நபர், ஓட்டல் கேட்டை மூடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் காரை ஓட்டல் வளாகத்துக்குள் நிறுத்தி விட்டு காம்பவுன்ட் ஏறி குதித்து தப்பி சென்றார். இதையடுத்து அந்த நபரை பிடிக்க போலீசார் விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதையடுத்து 400 கிலோ கஞ்சா, 2 கார், 5 செல்போனை பறிமுதல் செய்ததுடன் 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். ேமலும் கார் பதிவெண்ணை வைத்து தப்பியோடிய நபரை தேடிவருகின்றனர். மேலும் அவர் எங்கு கடத்துவதற்காக கஞ்சா வாங்க வந்தார், பின்புலத்தில் யார் யார் இருக்கின்றனர் என்று விசாரிக்கின்றனர்.

The post தெலங்கானாவில் இருந்து திருவாரூருக்கு 400 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 பேர் ஓட்டலில் சிக்கினர் appeared first on Dinakaran.

Read Entire Article