தெருநாய்களுக்கு கருத்தடை தீவிரப்படுத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

2 months ago 11

மதுரை: தேனி மாவட்டம் , உத்தமபாளையத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தேனி மாவட்டம், முத்தலாபுரத்தில் தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தி கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டீக்காராமன், செந்தில்குமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தெருநாய்கள் மற்றும் நாய் பிரியர்கள் வளர்க்கும் நாய்களால் இச்சமூகம் அச்சத்தை எதிர்கொள்ளும் நிலை உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்டவை தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். இதன்மூலம் காலப்போக்கில் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு விதிகளை ஒன்றிய அரசு கடந்தாண்டு வகுத்து உள்ளது.

அந்த விதிகளின்படி, ஒரு குழு அமைத்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக நிறைவேற்றுவதன் மூலம் தெருநாய்கள் தொல்லையில் இருந்து இந்த சமுதாயத்தை விடுவிக்க முடியும். எனவே, இந்த வழக்கில் விலங்குகள் நலவாரிய இயக்குநரை எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். இந்த மனுவிற்கு விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

 

The post தெருநாய்களுக்கு கருத்தடை தீவிரப்படுத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article