பேரவையில் கேள்வி நேரத்தின் போது வேலூர் ப.கார்த்திகேயன் (திமுக) பேசுகையில், என் தொகுதிக்குட்பட்ட வேலப்பாடி ஆரணி ரோட்டில் இருக்கிற நூறாண்டுகளுக்கு பழமையான வரசக்தி விநாயகர் கோயிலில் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தரவேண்டும். நடைபெறும் குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா?’’ என்றார். இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:
வரசக்தி விநாயகர் கோயிலை பொறுத்தளவில் ரூ.33 லட்சம் செலவில் 8 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து திருப்பணிகளும் முடிவுற்று குடமுழுக்கு நடைபெறும். உறுப்பினர் தமிழிலே குடமுழுக்கு நடத்தப்படுகிறதா என்று கேட்டார். இன்றைய தினம் (நேற்று) 22 கோயில்களில் குடமுழுக்கு நடந்தது. அதில் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட உத்திரகோசமங்கை கோயில், மருதமலை போன்ற 3 கோயில்களும், நூறாண்டுகளுக்கு மேற்பட்ட ஐந்து கோயில்களிலும் குடமுழுக்கு நடந்தது. 115 பெண் ஓதுவார்கள் உள்பட 350க்கும் மேற்பட்ட தமிழ் ஓதுவார்கள் 22 கோயிலில் தமிழ் திருமுறைப் பாடி எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற வகையில் குடமுழுக்கு நடந்தது.
திருவண்ணாமலையில் திரவுபதி அம்மன் கோயிலில் “ஓம் சக்தி” என்றும், மருதமலையில் பார்த்தால் ”அரோகரா” என்றும், திண்டுக்கல் பெருமாள் கோயிலில் ”நமோ நாராயணா” என்றும், உத்தரகோசமங்கை உள்ளிட்ட சிவன் கோயில்களில் உத்தரகோசமங்கை முதல் சிவன் கோயிலான அந்த சிவன் கோயிலில் “சிவசிவா” என்ற கோஷத்தோடும் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தெய்வ கோஷங்களோடும் திருமுறை, திருப்புகழோடும் குடமுழுக்கு நடைபெறுகின்ற ஒரு ஆன்மிக ஆட்சியாக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து கோயில்களிலும் தமிழ் மந்திரம் ஓதப்படுகிறது. இவ்வாறு பேசினார்.
* ‘துரைமுருகனை மூத்த அமைச்சர்ன்னு சொல்லாதீங்க…’
கேள்வி நேரத்தின் போது மயிலம் ச.சிவகுமார் (பாமக) பேசுகையில், “மயிலம் ஒன்றியத்தில் நெடுமுடி அணைக்கட்டு புனரமைக்கப்படுமா? நீர்வளத் துறையில் சாதனை படைக்கும் மூத்த அமைச்சர் செய்து தருவாரா” என்றார். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “நேற்றே சொல்லியிருக்கிறார்கள் அல்லவா. மூத்த அமைச்சர் என்று சொல்லாதீர்கள்” என்றார். தொடர்ந்து ச.சிவகுமார் பேசுகையில், “சாதனை அமைச்சர் செய்து தருவாரா’’ என்றார். உடனை சபாநாயகர், ‘‘நீர்வளத் துறை அமைச்சர் இருக்கிறவர்களிலேயே இளைய அமைச்சர்’’ என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.
The post தெய்வ கோஷங்களோடும் திருமுறை, திருப்புகழோடும் கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.