
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோடை வறட்சியால் வனப்பகுதி பசுமை இழந்து காணப்பட்டது. வனவிலங்குகளின் நடமாட்டமும் குறைந்தது. தொடர்ந்து பொதுத்தேர்வு உள்பட பல்வேறு காரணங்களால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.
இந்த நிலையில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. மேலும் நீலகிரியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை பரவலாக தொடர் மழை பெய்தது. இதனால் வறட்சியின் பிடியில் இருந்த வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. இதன் எதிரொலியாக காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. மேலும் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் முதுமலை தெப்பக்காடு பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அதிகளவு நிறுத்தப்படுகின்றன.
மேலும் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வரும் சுற்றுலா பயணிகள், அதன் முன்பே வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் முகாம் எதிரே வாகனங்களை நிறுத்த வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இதற்கு பதிலாக மாயாற்றின் கரையோரம் வாகனங்களை கட்டண அடிப்படையில் நிறுத்துவதற்கு புதிய இடத்தை வனத்துறையினர் ஒதுக்கி உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தெப்பக்காடு மாயார் ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடி செலவில் சிமெண்ட் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இதனால் வாகனங்கள் தெப்பக்காடு விருந்தினர் மாளிகை வழியாக இயக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளும் அந்த வழியாக வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்று வந்தனர். இதனால் வாகனங்களை வளர்ப்பு யானைகள் முகாம் எதிரே நிறுத்த அனுமதிக்கப்பட்டது.
தற்போது பாலம் வழியாக போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து மாயாற்றின் கரையோரம் கட்டண அடிப்படையில் வாகனங்களை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.