சென்னை: தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர். 18 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர் ஒன்றிணைந்து பஸ் ஏற்பாடு செய்து சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்களின் பஸ் தேனியை அடுத்த மதுராபுரி அருகே திண்டுக்கல் – குமுளி புறவழிச்சாலையில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே சபரிமலை சென்று விட்டு திரும்பிய கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட டெம்போ வேன், பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஓசூரை சேர்ந்த கணேஷ் (7), நாகராஜ் (40), கிருஷ்ணகிரியை சேர்ந்த சூர்யா (23) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
* விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம்(47). குழாய் பதிக்கும் பணிக்காக நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ராதாகிருஷ்ணன்(47), சின்னமுனியாண்டி(45) மற்றும் கருமலையான்(35) ஆகியோரை அழைத்துக் கொண்டு குத்தாலிங்கம், தனது காரில் ராமநாதபுரம் வந்துள்ளார். நேற்று காலை 9 மணியளவில் ராமநாதபுரம் அரசு சேதுபதி கலை கல்லூரி அருகே கார் வந்தபோது, எதிரே ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
* சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகாவில் வைக்கோலை வாங்குவதற்காக கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (37), பழனி (37), பிரகாஷ் (30) ஆகிய மூவரும் நேற்று காலை 9 மணி அளவில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தேவகோட்டை தனியார் பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த வேனும், டூவீலரும் நேருக்கு நேர் மோதின. இதில் டூவீலரில் வந்த முத்துகிருஷ்ணன், பழனி ஆகியோர் இறந்தனர், பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.
* பைக் மோதி போலீஸ்காரர் சாவு
திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு மலைக்கிராமத்தில் உள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (43). இவர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து ஆம்பூரில் இருந்து நாட்றம்பள்ளி நோக்கி பைக்கில் சென்றார். வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நியூடவுன் மேம்பாலத்தை கடந்தபோது திடீரென இவரது பைக் நிலைதடுமாறி அங்குள்ள தடுப்புக்கம்பியில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட காளிதாஸ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
The post தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து விபத்து 3 ஐயப்ப பக்தர்கள் உட்பட 8 பேர் பலி: 18 பேர் படுகாயம் appeared first on Dinakaran.