*குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர்கள் கோரிக்கை
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுவர்கள் மற்றும் மேற்கூரை சேதம் அடைந்த நிலையில் கோடை விடுமுறையில் அதனை சீரமைத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்ச்சி அடைய செய்யக்கூடிய வகையில் 2 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி கற்பிக்கும் வகையில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையில் கீழ் செயல்பட்டு வரும் இந்த அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பது மட்டுமல்லாத விளையாட்டுக்கு தேவையான உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது. இங்கு அழைத்து வரப்படும் குழந்தைகளுக்கு கல்வி மட்டும் அல்லாது குழுக்களாக விளையாடுவது சக சிறுவர் சிறுமியர்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் விளையாடுவது உள்ளிட்டவை குறித்து கற்றுத் தரப்படுகிறது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறிந்த அதற்கு ஏற்ப அவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது.
மேலும், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான உணவு வகைகள் சத்துமாவு உள்ளிட்டவை அங்கன்வாடி மையங்கள் மூலமாகவே வழங்கப்படுகிறது. தொழில் நகரான திருப்பூரில் கடந்த கல்வி ஆண்டு வரையிலான கணக்கெடுப்பின்படி 1472 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் மட்டுமல்லாது பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவதற்காக பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளும் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்ட்பட்ட 51 மற்றும் 52 வது வார்டுக்கு உட்பட்ட காட்டுவளவு மற்றும் பூம்புகார் நகர் பகுதிக்கான அங்கன்வாடி மையம் திருப்பூர் தென்னம்பாளையம் அரசு பள்ளிக்கு பின்புறமாக செயல்பட்டு வருகிறது.
இந்த அங்கன்வாடி மையத்தில் வரவேற்பு அறையில் குழந்தைகளை கவரும் வகையில் வரைபடங்கள் வரையப்பட்டு ஆர்வத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தாலும் அங்கன்வாடி மையத்திற்குள் சுவர் மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்த 2 அங்கன்வாடி மையங்களிலும் 60 குழந்தைகள் காலை 9 மணி அளவில் அங்கன்வாடி மையங்களுக்கு வரவழைக்கப்படுகின்றனர்.
காலை அங்கன்வாடி மையங்களுக்கு வந்தவுடன் அவர்களுக்கு சத்து மாவில் செய்யப்படும் தின்பண்டங்கள் வழங்கப்படுகின்றன. அதனைத்தொடர்ந்து ஆரம்பக் கல்வி, விளையாட்டு ஆகியவை கற்றுத்தரப்படுகிறது. மீண்டும் மதியம் அங்கன்வாடி மையத்திலேயே சமைக்கப்பட்ட உணவு குழந்தைகளுக்கு பரிமாறப்படுகிறது.
அதற்கு பிறகு சிறிது நேரம் அவர்கள் அங்கேயே உறங்க வைக்கப்படுகின்றனர். மீண்டும் மாலை பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து செல்கின்றனர். நாளொன்றுக்கு சுமார் 7 மணி நேரம் வரை குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் செலவழிக்கின்றனர். இவர்களை கவனித்துக் கொள்வதற்காக 2 மையங்களுக்கும் 3 ஆசிரியர்கள் 2 உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சத்துமாவு பெறுவதற்காக மற்றும் கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி, சொட்டு மருந்து பெறவும் புதன்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு வருகை தந்து செல்வது வழக்கம்.
நாளொன்றுக்கு சுமார் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய இந்த அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சுவர் மற்றும் மேற்கூரைகள் சிதலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழக்கூடிய நிலையில் இருப்பதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
திருப்பூரில் தனியார் மையங்கள் பலவும் செயல்படுகின்றன. இங்கு சில ஆயிரங்கள் செலுத்தி 2 வயது முதல் குழந்தைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அங்கன்வாடி மையங்களில் கற்றுத்தருவது போன்று ஆரம்ப கல்வியும் விளையாட்டுகளும் கற்றுத் தரப்படுகிறது.
ஆனால், தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் அங்கன்வாடி மையங்களிலேயே அதிக அளவு தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் சேர்த்து செல்கின்றனர். மதுரையில் தனியார் நர்சரி பள்ளியில் ஏற்பட்ட விபத்தில் குழந்தை இறந்த சம்பவம் போல் நிகழாமல் இருக்க திருப்பூரில் உள்ள அங்கன்வாடி மையங்களை முழுவதுமாக ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தையின் பெற்றோர் லட்சுமி கூறுகையில்,“அங்கன்வாடி மையத்தின் நிலையை பார்க்கும் போது குழந்தைகளை இங்கு கொண்டு வந்து விடவே பயமாக உள்ளது. விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி துவங்கும் சமயத்தில் ஏராளமான குழந்தைகள் இங்கு ஆரம்ப கல்விக்காக வருவார்கள்.
அந்த சமயத்தில் இது போன்ற சேதங்களால் அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். உடனடியாக இந்த அங்கன்வாடி மையத்தை சரி செய்து புதுப்பிக்க வேண்டும். இடியும் நிலையில் உள்ள கூலிங் சீட்டை அகற்றிவிட்டு புதிதாக மாற்றித் தர வேண்டும்.
வெயில் காலங்களில் சிமெண்ட் சீட் கூரைகளின் கீழ் குழந்தைகள் அதிக நேரம் இருப்பதால் அவர்களுக்கு அதிக வெப்பத்தால் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதற்கு மாற்று ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.
மேலும், குழந்தைகளுக்கான சத்து மாவு, சமையல் செய்வதற்கு தேவையான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அறைக்கு பின்புறம் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு, எலி உள்ளிட்ட விஷ ஜந்துகள் வந்து உணவுப்பொருட்களை சேதப்படுத்தி செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இதனை கவனத்தில் கொண்டு கோடை விடுமுறையில் இவற்றை சரி செய்து ஜூன் மாதம் மீண்டும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படும் போது புதுப்பொலிவுடன் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
கழிவறை வசதி தேவை
சுமார் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் 5 பணியாளர்கள் மட்டுமல்லாது குழந்தைகளுடன் அவ்போது பெற்றோர்கள் வந்து செல்லக்கூடிய அங்கன்வாடி மையத்தில் அடிப்படை கழிவறை வசதிகள் இல்லாமல் உள்ளது. ஒரே ஒரு கழிவறை உள்ள நிலையில் அதன் மேற்புறம் உள்ள தண்ணீர் தொட்டி முழுவதும் செடிகள் முளைத்து பாசி படர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது. இவற்றையும் கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post தென்னம்பாளையத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுவர்கள், மேற்கூரைகள் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.