தென்கொரிய பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

3 months ago 16

ஸ்டாக்ஹோம்: மனித வாழ்க்கையின் பலவீனத்தை பற்றி கவிதை உரைநடையாக எழுதிய தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு 2024ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்ககப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தென்கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையின் பலவீனத்தை பற்றி எழுதிய அவரது கவிதை உரைநடைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. அவருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும்.

ஹான் காங் தென் கொரியாவின் குவாங்ஜுவில் 1970ல் பிறந்தார். அவர் இலக்கியப் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர். 1993ம் ஆண்டு முன்ஹக்-க்வா-சாஹோ (இலக்கியம் மற்றும் சமூகம்) குளிர்கால இதழில் ‘சியோலில் குளிர்காலம்’ உட்பட ஐந்து கவிதைகளை வெளியிட்டதன் மூலம் அவர் ஒரு கவிஞராக தனது இலக்கிய அறிமுகத்தை மேற்கொண்டார். அடுத்த ஆண்டு நாவலாசிரியராக மாறினார். ஹான் காங் 2016ம் ஆண்டு ‘தி வெஜிடேரியன்’ நாவலுக்காக சர்வதேச புக்கர் பரிசை வென்றார்.

‘ஐ டூ நாட் பிட் பேர்வெல்’ நாவலுக்காக 2023ல் பிரான்சில் மெடிசிஸ் பரிசையும், 2024ல் எமிலி குய்மெட் பரிசையும் பெற்றார். தற்போது வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது கவிதை உரைநடைக்காக நோபல் பரிசு பெற்றுள்ளார் 53 வயதான ஹான் காங். இலக்கியத்திற்காக இதுவரை 119 நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதில் 17 பேர் மட்டுமே பெண்கள். கடைசியாக 2022ல் பிரான்சின் அன்னி எர்னாக்ஸ் நோபல் பரிசு வென்றார். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இன்றும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அக்டோபர் 14ம் தேதியும் அறிவிக்கப்படும்.
நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று நடைபெறும் விழாக்களில் பரிசு பெற்றவர்களுக்கு விருது வழங்கப்படும்.

 

The post தென்கொரிய பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article