தென்காசியில் ரூ.3.60 கோடியில் நிறுவப்பட்டுள்ள வெண்ணி காலாடி, குயிலி ஆகியோரது சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

3 months ago 19

சென்னை: தென்காசி அருகே ரூ.3.60 கோடியில் வெண்ணி காலாடி, குயிலி ஆகியோரது திருவுருவச் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவன் படைத்தளபதி வெண்ணி காலாடி அவர்களுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலித்தாய் அவர்களுக்கும், தலா 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலைகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் அவர்களுக்கு 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் ஆகியவற்றைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல், விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தும், சொத்து சுகங்களை இழந்தும், தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிப் பெருமைப்படுத்திடும் வகையில், காந்தி மண்டபத்தில் வ.உ.சி. அவர்கள் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு அங்கு அவரது மார்பளவு சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை, கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ. சிதம்பரனார் முழு உருவச் சிலை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, என பல்வேறு தியாக சீலர்களுக்கு சிலைகளை நிறுவி, மணிமண்டபங்கள் அமைத்து அவர்களின் புகழ்போற்றி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகத் திருமக்களான வெண்ணி காலாடி, வீரத்தாய் குயிலி ஆகியோரது திருவுருச்சிலைகள் மற்றும் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் அவர்களின் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் பற்றிய விவரங்கள்:

சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடி அவர்களின் திருவுருவச் சிலை
“தானம் என்றால் கேள் தருகிறேன். வரியென்றால் ஒருநெல்மணி கூட கட்டமாட்டேன்” என்று முழங்கி நெல்கட்டான் செவல் எனப்பேர் படைத்த பூலித்தேவனின் முக்கிய தளபதியாகத் திகழ்ந்து – வெள்ளையரை வென்றழித்து பூலித்தேவன் மடியில் உயிர்நீத்த மாவீரன் வெண்ணி காலாடியின் தியாக வீரத்தைப் போற்றிடும் வகையில், 2023-24ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் தென்காசி மாவட்டத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தென்காசி மாவட்டம், விசுவநாதப்பேரியில் வெண்ணி காலாடி அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலி அவர்களின் திருவுருவச் சிலை
சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரைக் கொன்று வஞ்சகத்தால் சிவகங்கையை கைப்பற்றிய, வெள்ளையரை வென்று சிவகங்கையை மீட்டிடச் குளுரைத்துத் திண்டுக்கல் விருப்பாட்சி கோபால் நாயக்கரிடம் உதவிகேட்டுத் தஞ்சமடைந்தார் அவருடைய மனைவி வேலுநாச்சியார். அவர் தம்முடைய படைத் தளபதியாக விளங்கிய வீரத்தாய் குயிலி, மருதுபாண்டியர்களுடன், திப்புசுல்தான் உதவியோடு சிவகங்கையை மீட்டிடப் படைதிரட்டி, வழியில் எதிர்ப்பட்ட பகைவர்களை எல்லாம் வென்றழித்து சிவகங்கையில் முகாமிட்டிருந்த வெள்ளையரைத் தாக்கினார். அந்தப்போர் முனையில் ஆங்கிலேயரின் அதிநவீன ஆயுதங்களால் தோல்விகாண நேரும் சூழ்நிலை உருவானபோது வீராங்கனை வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி மெய் முழுதும் எரியெண்ணெயைத் தடவிக் கொண்டு வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்து அழித்துத் தியாகச் சுடராகி சிவகங்கை வெற்றிக்கு வழிவகுத்தார்.

2023-24ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலி அவர்களுக்கு சிவகங்கையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை வட்டம், இராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் குயிலித்தாய்க்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச்சிலையை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் அவர்களின் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அருமை நண்பர் வீரபாண்டியக் கட்டபொம்மனை நயவஞ்சகத்தால் கைது செய்து தூக்கிலிட்ட ஆங்கிலேயருக்குத் தக்க பாடம் புகட்டுவேன் எனச் சூளுரைத்து அதற்குரிய தருணத்தை நோக்கியிருந்தார் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர். அவரிடம் வரி கேட்டு வந்த அந்திரை கேதிஷ் என்ற ஆங்கிலேயத் தளபதியைப் பிடித்துத் தூக்கிலிட்டுப் பழிக்குப்பழி வாங்கினார் சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் அவர்கள்.

அவரது வீரத்தை போற்றி 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் அவர்களின் திருவுருவச் சிலையையும், தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் நினைவு அரங்கத்தையும் முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தனம், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மருத்துவர் இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக சிவகங்கை மாவட்டத்திலிருந்து மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ. தமிழரசி, திரு. எஸ். மாங்குடி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும், தென்காசி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் சதன் திருமலைக்குமார், ராஜா, மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும், திருப்பூர் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வரசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் தா.கிறிஸ்துராஜ், இ,ஆ,ப., எத்தலப்பர் நாயக்கர் வம்சா வழியினர் க.ராமகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

The post தென்காசியில் ரூ.3.60 கோடியில் நிறுவப்பட்டுள்ள வெண்ணி காலாடி, குயிலி ஆகியோரது சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Read Entire Article