சென்னை,
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று பகலில் இருந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் நெல்லை மாநகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம்போன்று தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்றார். அப்போது, கனமழை பெய்து வருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், கனமழை காரணமாக மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிட்டார். மேலும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.