சென்னை,
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் கல்வி, வேலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக தங்கியுள்ள மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். இதனால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து தென் மவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகளின் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.
குறிப்பாக, வைகை, செந்தூர், கன்னியாகுமரி, அனந்தபுரி, நெல்லை, பொதிகை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது. சென்னை எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறுவதை காண முடிந்தது.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தென் மாவட்ட ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொங்கல், மகரவிளக்கு பூஜையையொட்டி பயணிகளுக்காக சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று இரவு சிறப்பு ரெயில் (06151) இயக்கப்படுகிறது. இன்று இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், திருவனந்தபுரத்துக்கு மறுநாள் மதியம் 2 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயிலானது விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்கிறது.