
சென்னை,
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தபால் துறையின் சார்பில் மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வமகள் சேமிப்புத்திட்ட கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அத்துடன், மகளிர் தின கொண்டாட்டத்தில் கணக்கு தொடங்கும் அனைத்து செல்வ மகள் சேமிப்பு திட்ட பயனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், முதுநிலை தபால் கண்காணிப்பாளர் சார்பில் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அதாவது, அரசரடி, தல்லாகுளம், ஸ்காட்ரோடு தலைமை தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதேபோல, தென்மாவட்டங்களில் உள்ள தபால்நிலையங்களில் இன்று (புதன்கிழமை) மற்றும் வருகிற 20-ந் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றன.
பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு 2015-ம் ஆண்டு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல தபால்துறையில், கடந்த ஜனவரி மாதம் வரை 7 லட்சத்து 86 ஆயிரம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.5,219 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் 10 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250 மற்றும் அதிகபட்சமாக ரூ.1½ லட்சம் செலுத்த முடியும். இதற்காக 8.2 சதவீதம் வட்டியாக வழங்கப்படுகிறது. வருமான வரிச்சட்டத்தின் சலுகை பிரிவு 80-சி படி, ஒரு ஆண்டுக்கு ரூ.1½ லட்சம் வரிச்சலுகை பெற முடியும்.
பெண் குழந்தைக்கு 18 வயது அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் உயர்கல்விக்காக இந்த கணக்கில் இருந்து 50 சதவீத தொகையை எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. இந்த கணக்கை தொடங்கியதில் இருந்து 21 வருடங்களுக்கு பின்னர் முதிர்ச்சி அடையும். 18 வயது நிரம்பிய பெண் திருமணத்துக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அல்லது திருமணம் முடிந்து 3 மாதங்களுக்கு பின் கணக்கை முடித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.