வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றது முதல் டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். உள்நாட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், அயல்நாடுகளுக்கும் நெருக்கடி அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார்.
அந்த வகையில் ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாட்களிலேயே ரஷியாவுக்கு அவர் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். உக்ரைன் உடனான போரை உடனடியாக நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி விதிப்பையும், கடுமையான பொருளாதார தடைகளையும் ரஷியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என டிரம்ப் எச்சரித்தார். சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய 3 நாடுகளுக்கு புதிய வரியை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
இதனிடையே டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு கனடா மற்றும் மெக்சிகோ உடனடியாக எதிர்வினையாற்றின. அதன்படி 155 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இதனால் வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை நிறுத்த உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவில் புதிய நில அபகரிப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. இதற்கு துணையாக அமெரிக்கா நிற்காது. அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும்"என்று கூறியுள்ளார்.