மதுரை: குப்பை பராமரிப்பு, சாக்கடை சுத்தம் செய்வது போன்ற மாநகராட்சியின் அன்றாட தூய்மைப் பணிக்கு தேவைப்படும் தடவாளப் பொருட்கள் பற்றாக்குறையால், தூய்மைப் பணியாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். மதுரை மாநகராட்சி நிர்வாகம், தடவாளப்பொருட்களை கொள்முதல் செய்து, ஸ்டாக் வைத்திருக்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் தூய்மைப்பணி மேற்கொள்வதற்கு நிரந்தரப் பணியாளர்கள் 800 பேர் பணிபுரிகிறார்கள். ஒப்பந்தப் பணியாளர்கள், தினக்கூலிப் பணியாளர்கள், தொகுப்பூதியப் பணியாளர்கள் 3,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகிறார்கள். மாநகராட்சியின் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், வசிக்கும் மக்கள்தொகைக்கு தகுந்தவாறு, தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கை இல்லை. சுகாதாரத் துறை அதிகாரிகள், அவர்களை மிகுந்த சிரமப்பட்டே, அன்றாட தூய்மைப் பணி மேற்கொள்ள வைத்து குப்பைகளை உரக்கிடங்கிற்கு கடத்துகிறார்கள்.