தூத்துக்குடி: தூத்துக்குடி – சென்னை இடையே பகல் நேர ஜன சதாப்தி ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லை ரயில்வே கோட்டம் சில ஆண்டுகளில் உருவாகும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கொரோனா காலத்துக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல்நேர லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்டது. சுமார் 4 ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்படாமல் உள்ளது.
அதேபோன்று தூத்துக்குடி- சென்னை இடையே ஜன சதாப்தி ரயில் இயக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த ரயில் சாதாரண கட்டணத்துடன் பகல் நேரத்தில் சென்னைக்கு பயணிக்க தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு உபயோகமாக இருக்கும். எனவே தூத்துக்குடி மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தூத்துக்குடி- சென்னை இடையே பகல் நேர ஜன சதாப்தி ரயிலை இயக்க வேண்டும். பாலக்காடு- தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலில் ஒரு மூன்றடுக்கு ஏ.சி பெட்டியும், ஒரு 2 அடுக்கு ஏ.சி பெட்டியும், ஒரு 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும் இணைக்க வேண்டும். தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தூத்துக்குடி – சென்னை இடையே பகல் நேர ஜன சதாப்தி ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.