
புதிய தமிழகம் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளரும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான ரமேஷ்குமார் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். கடந்த வாரம் திருநெல்வேலி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் வெளிநாட்டிற்கு சிலை கடத்தியதாக குற்ற வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த தங்கசதிஷ், பிரதாப், வெற்றிவேல், விக்னேஷ் ஆகிய 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்ட ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த மேற்படி குற்றவாளிகள் அனைவரும் திமுகவை பின்புலமாக கொண்டவர்கள் ஆவார்கள்.
மேலும் ஓட்டப்பிடாரம் திமுக எம்.எல்.ஏ. சண்முகையா மற்றும் அவரது சகோதரர் முருகேசன் ஆகிய இருவருக்கும் இந்த சிலை கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் திருநெல்வேலி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் சரி வர விசாரிக்காமல், உண்மைக் குற்றவாளிகளை இவ்வழக்கில் இருந்து தப்ப விட சதி நடப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
ஆகையால் தாங்கள் இவ்வழக்கில் ஓட்டப்பிடாரம் திமுக எம்.எல்.ஏ. சண்முகையா மற்றும் அவரது சகோதரர் முருகேசன் மற்றும் உண்மை குற்றவாளிகள் இவ்வழக்கில் இருந்து தப்பி விடாமல் நீதியை நிலைநாட்டிட, இவ்வழக்கினை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசிற்கு பரிந்துரை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு அளிக்கும்போது புதிய தமிழகம் கட்சி மாநில பொருளாளர் செல்லத்துரை, நெல்லை மாவட்ட செயலாளர் முத்தையா ராமர், மாவட்ட துணைச் செயலாளர் குமார், பாளை ஒன்றிய செயலாளர் பழனி, வழக்கறிஞர் ஜெகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.