
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பாக தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி மற்றும் கையுந்துப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுக்களில் 2025-ம் ஆண்டிற்கான "கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்" வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை காலை 6 மணி முதல் 8 மணி வரையும் மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் என இருவேளைகளிலும் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. ஹாக்கி ஆண்களுக்கு மட்டும் கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாம் முற்றிலும் இலவசம். நுழைவு கட்டணம் இல்லை.
இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் பங்கேற்பதற்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியிலும், 0461-2321149, 74017 03508 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன் பெறலாம். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.