தூத்துக்குடி அருகே பரபரப்பு சர்ச்சுக்குள் புகுந்து ஊழியருக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது 3 சிறுவர்களுக்கு போலீஸ் வலை

2 weeks ago 4

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி அருகே சர்ச்சுக்குள் புகுந்து ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப்-1, சிஎஸ்ஐ சர்ச் வளாகத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் அந்தோணிராஜ் (54). கடந்த 25 ஆண்டுகளாக சிஎஸ்ஐ சர்ச் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த சர்ச்சில் கடந்த 24ம் தேதி முதல் விடுமுறை கால வேதாகம பள்ளி வகுப்புகள் நடந்து வருகின்றன. இதில் தெர்மல் நகர் கேம்ப்-1ல் உள்ள தேவாலயத்திற்கு பாத்தியப்பட்ட கிறிஸ்தவ சிறுவர்கள் ஏராளமானோர் வேதாகமம் படித்து வருகின்றனர்.

நேற்று காலை வேதாகம வகுப்பு நடந்து கொண்டிருந்த போது 17 வயதான இளஞ்சிறார் ஒருவர் வாயில் புகையிலையை மென்று கொண்டு வந்துள்ளார். அவர் காலை நீட்டி அமர்ந்து வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஆலய பணியாளர் சாமுவேல் அந்தோணிராஜ், அவரை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், சாமுவேலை அவதூறாக பேசிவிட்டு சர்ச்சில் இருந்து வெளியே சென்றுவிட்டார். பின்னர் காலை 11 மணிக்கு அவர், வேறு 2 சிறுவர்களையும், வாலிபர் ஒருவரையும் அழைத்து வந்து அந்தோணிராஜை தாக்கியதுடன், தன்னை கண்டித்ததற்கு மன்னிப்பு கேட்கும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுவனிடம் அந்தோணிராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கிடையே மற்றொரு சிறுவன் கல்லை எடுத்து தேவாலயத்திற்குள் எறிந்தார். இதை அந்தோணிராஜ் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபரும், 3 சிறுவர்களும் சேர்ந்து கத்தியால் அந்தோணிராஜின் பின்னந்தலையில் குத்தியதோடு, அவரது செல்போனையும் உடைத்தனர். இதில் அந்தோணிராஜின் அலறல் சத்தம் கேட்டு, சர்ச்சில் இருந்தவர்கள் ஓடி வரவே, 4 பேரும் தப்பியோடி விட்டனர்.

படுகாயமடைந்த சாமுவேல் அந்தோணிராஜ், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தூத்துக்குடி தெர்மல்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி தெர்மல் நகர், கேம்ப்-1 பகுதியைச் சேர்ந்த சலீம் மகன் முகமது மீரான் உசேன் (20) மற்றும் 3 சிறுவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பதுங்கியிருந்த முகமது மீரான் உசேனை தெர்மல்நகர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 3 சிறுவர்களைதேடி வருகின்றனர்.

The post தூத்துக்குடி அருகே பரபரப்பு சர்ச்சுக்குள் புகுந்து ஊழியருக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது 3 சிறுவர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Read Entire Article