சேந்தமங்கலம் : நாமக்கல் -துறையூர் சாலை விரிவாக்க பணியில், தூசூர் ஏரிக்கரையை அகலப்படுத்தி உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
நாமக்கல்- துறையூர் சாலையில், சேந்தமங்கலம் நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட ரெட்டிப்பட்டியிலிருந்து எருமப்பட்டி வரை, போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை- மாலை நேரங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கையை ஏற்று, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலை துறையின் மூலம் சாலை விரிவாக்கம் செய்ய அரசிடம் நிர்வாக அங்கீகாரம் பெறப்பட்டது. முதல் கட்டமாக 9.20 கி.மீ., தூரத்திற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, தூசூர் ஏரிக்கரை பகுதியில் வாகனங்கள் சீராக செல்லும் வகையில், கரையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக உபரிநீர் வெளியேறும் பகுதியில் கட்டப்பட்டிருந்த சிறிய பாலம் அகற்றப்பட்டு, உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாமக்கல்லில் இருந்து ரெட்டிப்பட்டி, எருமப்பட்டி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கும், பாலத்தின் அருகே தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
தூசூர் ஏரிக்கரையில் சாலை குறுகலாகவும், பாலம் சற்று வளைவான இடத்திலும் இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதனை கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைத்துறையினர் ஏரிக்கரையை அகலப்படுத்தி, பாலத்தை நேராக அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post தூசூர் ஏரிக்கரையை அகலப்படுத்தி உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.