
சென்னை,
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்கள், 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகள் என மொத்தம் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் எழுதி இருந்தனர். இவர்களைத் தவிர தனித்தேர்வர்களாக 16 ஆயிரத்து 904 பேரும், சிறைவாசிகளாக 140 பேரும் எழுதினார்கள்.
தேர்வை எழுதியவர்களுக்கான தேர்வு முடிவு நேற்று வெளியானது. மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டன. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேரில், 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 மாணவர்கள், 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 மாணவிகள் என மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் வெற்றி பெற்றிருக்கின்றனர். தேர்ச்சி சதவீதம் 95.03 ஆகும். வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். தேர்வில் 39,352 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், "தேர்ச்சி பெற இயலாத மாணவர்களே துவண்டுவிடாதீர்கள். உடனடியாக துணைத்தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெறுங்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதி செய்யும் - தமிழ்நாடு முதல்-அமைச்சர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 7.47 லட்சம் மாணவர்களின் பெற்றோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " வணக்கம்.. நான் உங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன். பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் உங்கள் பிள்ளைகள் தேர்ச்சி அடைந்த செய்தி கேட்டு உங்களைப் போலவே (பெற்றோர்கள்) நானும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்தேன். உங்கள் பிள்ளைகளை கட்டாயம் மேற்படிப்புகளில் சேர்க்க வேண்டும். தமிழக அரசு அதற்கு பல திட்டங்களை வைத்துள்ளது. அவற்றையெல்லாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த தருணத்தில் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கல்விதான் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கிற மிகப்பெரிய சொத்து. யாராலும் அழிக்க முடியாத சொத்து. உங்களுக்கு உதவ எல்லா வகையிலும் தமிழக அரசு தயாராக இருக்கிறது. வளமான எதிர்காலம் நோக்கி உயர்கல்வியில் காலடி எடுத்து வைக்க உள்ள உங்கள் பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.. வணக்கம்" என்று தெரிவித்துள்ளார்.
