சென்னை: துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அதிமுகவை அசைத்து கூட பார்க்க முடியாது என்று செங்கோட்டையனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கும்படி பேசியுள்ளார். அண்மையில் அவிநாசி அத்திக்கடவு விவசாயிகள் சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் புறக்கணித்தார். இது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் கோபிசெட்டிபாளையம் அருகே எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், ஜெயலலிதாவுடன் 14 முறை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். நான் செல்கின்ற பாதை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்த பாதை. அந்த தெய்வங்கள் இரண்டு பேரும்தான் எனக்கு வழிகாட்டிகள். நான் நேர்மையான பாதையில் செல்கிறேன்” என்று பேசி எடப்பாடியின் பெயரை குறிப்பிடாமல் அவரை புறக்கணிப்பு செய்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது: அதிமுக சோதனைகளை சந்திக்கலாம். ஆனால் அது சோதனைகள் அல்ல, அதிமுக தொண்டர்களின் மனவலிமைக்கு வலுசேர்க்கும் சந்தர்ப்பமாக பார்க்க வேண்டும். இன்றைக்கு எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அதிமுகவை அசைத்து கூடப் பார்க்க முடியாது.
ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்துவதற்காக ஒரு மாபெரும் தியாக வேள்வியை நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசியுள்ளார். ஆர்.பி.உதயகுமாரின் இந்த வீடியோ பதிவு, செங்கோட்டையனுக்கு எடப்பாடி மறைமுகமாக விடுக்கும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் நடைபெறும் உச்சக்கட்ட மோதலால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். காரணம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். அப்போது, சசிகலாவுக்கு வழிவிட்டு ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று அன்றைக்கு கலக குரல் எழுப்பியதும் இதே ஆர்.பி.உதயகுமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
* உதயகுமார் திடீர் பல்டி
மதுரை அருகே டி.குன்னத்தூரில் உதயகுமார் நேற்று மாலை நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் வெளியிட்ட வீடியோ யார் மனதையும் புண்படுத்துவதற்காகவோ, பதில் சொல்வதற்காகவோ அல்ல. திண்ணை பிரசாரங்களை தீவிரமாக எடுத்து செல்லவே வீடியோவில் கூறியிருந்தேன். காது, மூக்கு, வாய் வைத்து பல்வேறு விமர்சனங்கள் சொல்லி வருகிறார்கள். யாருக்கும் பதில் சொல்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை.
யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக வீடியோ வெளியிடவில்லை. முன்னாள் மூத்த அமைச்சர் செங்கோட்டையனை நாங்கள் மதிக்கிறோம். அதை சுட்டிக்காட்டியது தான் இன்று பல்வேறு சர்ச்சை எழுப்பி இருக்கிறது. காலையில் கூட நான் செங்கோட்டையனிடம் பேசி இருக்கிறேன். அவரது தியாகத்தை சாதாரணமாக மதிப்பிட முடியாது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை’’ என்று தெரிவித்தார்.
The post துரோகிகள் வைக்கும் வாதங்கள் அதிமுகவை அசைத்து பார்க்க முடியாது செங்கோட்டையனுக்கு அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை: உச்சகட்ட மோதலால் தொண்டர்கள் கலக்கம் appeared first on Dinakaran.