துரைப்பாக்கம் கண்ணகி நகரில் பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய இளம்பெண் கைது: கரூரில் சுற்றிவளைத்த தனிப்படை

2 months ago 11

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த ஆரோக்கியதாஸ் – நிஷாந்தி தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டாக குழந்தை இல்லை. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கடந்த ஆண்டு நிஷாந்தி கர்ப்பமானார். கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி, அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு வந்த திருவேற்காடு பகுதியை சேர்ந்த தீபா என்பவர், ‘‘நான் அரசு வேலை செய்கிறேன்.

குழந்தைக்கு மாதம் ரூ.1000 பெறும் திட்டம் உள்ளது. அதை நான் உங்களுக்கு பெற்று தருகிறேன்,’’ என்று கூறியுள்ளார். இதை நம்பிய நிஷாந்தியை, அவரது குழந்தையுடன் அழைத்துக்கொண்டு தீபா ஆட்டோவில் தி.நகர் சென்றுள்ளார். அங்கு ஒரு உணவகத்தில் தீபா, நிஷாந்தி ஆகிய இருவரும் சாப்பிட்டுள்ளனர். பின்னர், கை கழுவும் நேரத்தில் குழந்தையை தீபா கடத்தி சென்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நிஷாந்தி, கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் தயாள், செம்மஞ்சேரி உதவி ஆணையாளர் வைஷ்ணவி, உதவி ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து, சிசிடிவி பதிவுகளை வைத்து, திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் குழந்தையை மீட்டனர்.

இதையடுத்து, தீபாவின் 3வது கணவர் ஹரியை பிடித்து, அவர் மூலம், கரூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீபாவை, ஆய்வாளர் தயாள் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை கொண்டு வருகின்றனர்.
கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்டதுடன், கடத்திய பெண்ணையும் விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் மற்றும் பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

The post துரைப்பாக்கம் கண்ணகி நகரில் பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய இளம்பெண் கைது: கரூரில் சுற்றிவளைத்த தனிப்படை appeared first on Dinakaran.

Read Entire Article