
துபாய்,
துபாய் லாட்டரியில் சுமார் ரூ.2.32 கோடி பரிசுத்தொகை சிவகாசி வாலிபருக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் எனது திருமண செலவிற்கு பயன்படுத்த போகிறேன் என கூறினார்.
துபாயில் கணக்காளராக பணிபுரிந்து வருபவர் ஆனந்த் பெருமாள்சாமி (வயது 33). இவர் தமிழகத்தின் சிவகாசியை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமீரகத்தில் அறிமுக செய்யப்பட்ட லாட்டரியை வாங்க முடிவு செய்தார். ஒரு லாட்டரி டிக்கெட் விலை அதிகம் என்பதால், இதற்காக அவரது தமிழக நண்பர் பாலமுருகனுடன் சேர்த்து 12 பேர் கொண்ட குழுவை உருவாக்கினார். பின்னர் அவர் மாதத்திற்கு 2 லாட்டரி டிக்கெட்களை குழுவாக சேர்ந்து வாங்கி உள்ளார். 15 நாட்களுக்கு ஒருமுறை லாட்டரி டிக்கெட்டை வாங்கி குலுக்கலை நேரலையில் பார்த்து வந்துள்ளனர். மேலும் ஆனந்த் செயலியிலும் குலுக்கல் முடிவுகளை கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில் ஆனந்த் இரவு தூங்க செல்லும் முன்பு செயலியை பார்த்தபோது இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் இவர்கள் குழுவாக வாங்கிய லாட்டரிக்கு 10 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 32 லட்சம்) பரிசுத்தொகை இவரது பெயருக்கு விழுந்துள்ளது.
இது குறித்து அவர் அளித்த உற்சாக பேட்டியில் கூறியதாவது:-
துபாயில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வசித்து வருகிறேன். தற்போது அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் வெற்றிபெற்ற இரவும், அதற்கு அடுத்த நாளும் எனக்கு தூக்கம் வரவில்லை. எனது நண்பர்களிடம் இதனை தெரிவித்தபோது நகைச்சுவைக்காக சொல்வதாக நினைத்தனர். பரிசுத்தொகை குழுவில் உள்ள 12 பேர் பிரித்துக்கொள்ள இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20 லட்சம் வரை கிடைக்கும். அடுத்த மாதம் நான் திருமணம் செய்துகொள்ள உள்ளேன். எனது பங்கினை திருமணத்திற்கு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். அமீரக ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளேன். இங்கு கார் ஓட்ட வேண்டும் என்பது எனது கனவு. இப்போது அது நனவாகும். இவ்வாறு அவர் கூறினார்.