துபாய்: துபாய் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 17 வயது ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். துபாயில் கடந்த 14ம் தேதி முதல் துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இப்போட்டியில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் (22) மோதினர். முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக ஆடினர். இருவரும் சமபலத்தில் மோதியதால் டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை மிர்ரா கைப்பற்றினார்.
அடுத்த செட்டை எந்தவித சிரமமும் இன்றி ஆண்ட்ரீவா கைப்பற்றினார். இதனால், 7-6, 6-1 என்ற நேர் செட்களில் ஆண்ட்ரீவா வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டபிள்யுடிஏ 1000 சாம்பியன் பட்டத்தை மிக இளம் வயதில் (17) வென்ற வீராங்கனையாக அவர் உருவெடுத்துள்ளார். லீக் சுற்று போட்டிகளில் இகா ஸ்வியடெக் போன்ற முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி அவர் இறுதிக்கு முன்னேறி இருந்தார். அதேபோல் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரைனா சபலென்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு டாசன் முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. துபாய் ஓபனில் சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளதால் அடுத்த வாரம் வெளியாகும் டபிள்யுடிஏ புதிய ரேங்கிங் பட்டியலில் டாப் 10க்குள் மிர்ரா ஆண்ட்ரீவா இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post துபாய் ஓபன் இறுதிப்போட்டி: கிளாராவை வீழ்த்தி அசத்தல் 17 வயதில் சாம்பியன் ஆண்ட்ரீவா சாதனை appeared first on Dinakaran.