துபாய்: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத், குவைத்தில் நடைபெற்ற எம்பிக்கள் குழு பயணத்தின் போது உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக எம்பி பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையிலான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்குவதற்காக பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது. குவைத்தில் தீவிர வெப்பம் காரணமாக முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத்துக்கு உடலக்குறைவு ஏற்பட்டது.
அதனால் குவைத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறின. குலாம் நபி ஆசாத், தனது உடல்நலம் குறித்து வௌியிட்ட பதிவில், ‘குவைத்தில் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருவதால், அது எனது உடல்நலத்தை பாதித்தது. ஆண்டவனின் அருளால் நலமாக இருக்கிறேன். எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் எனது உடல்நிலை இயல்பாக இருப்பதாக உள்ளன’ என்று கூறினார்.
பஹ்ரைன் மற்றும் குவைத்தில் நடந்த கூட்டங்களில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்ததாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் இருப்பதால் சவுதி அரேபியா மற்றும் அல்ஜீரியா பயணங்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஏஐஎம்ஐஎம் எம்.பி. அசாதுதீன் ஒவைசி, முன்னாள் வெளியுறவு செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்கலா உள்ளிட்டோர் உள்ளனர். குலாம் நபி ஆசாத் விரைவில் குணமடைய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
The post துபாயில் கடுமையான வெப்பம் நிலவுவதால் குலாம்நபி ஆசாத் அட்மிட்: அனைத்து கட்சி எம்பிக்கள் குழு அதிர்ச்சி appeared first on Dinakaran.