துபாய்: துபாயில் அமெரிக்கா – ரஷ்யா தலைவர்கள் சந்திப்பு நடந்துள்ள நிலையில், உக்ரைன் தரப்பு பங்கேற்காத பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்க மாட்டேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான நிலைமையை சரிசெய்ய அமெரிக்காவும் ரஷ்யாவும் உயர்மட்ட மத்தியஸ்தக் குழுவை நியமித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக துபாயில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்க மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோப், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ஸ், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ரஷ்ய அதிபர் புடினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகள், இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் – புடின் இடையிலான சந்திப்பின் விதிமுறைகளும் விவாதிக்கப்பட்டன. புடினின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் அளித்த பேட்டியில், ‘டிரம்ப் – புடின் சந்திப்பு தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை’ என்று கூறினார். இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், ‘தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன், இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளேன்’ என்றார்.
அமெரிக்கா – ரஷ்யா உயர்மட்ட தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், உக்ரைன் தரப்பு தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எவரும் பங்கேற்க வில்லை. அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. எனவே மேற்கண்ட பேச்சுவார்த்தைகள் எந்தளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி அளித்த பேட்டியில், ‘உக்ரைன் தரப்பு பங்கேற்காத பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட எந்த முடிவையும், நான் ஏற்க மாட்டேன்’ என்று அதிரடியாக கூறியுள்ளார்.
The post துபாயில் அமெரிக்கா – ரஷ்யா தலைவர்கள் சந்திப்பு; உக்ரைன் பங்கேற்காத பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்க மாட்டேன்: அதிபர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு appeared first on Dinakaran.