நன்றி குங்குமம் தோழி
உன்னத உறவுகள்
கூட்டுக்குடும்பமாக இருந்தால், தனிப்பட்ட ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். இன்றைய காலக்கட்டம் போல தனித்தனி அறைகள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அனைவரின் மனதிலும் நமக்கென தனி இடம் கண்டிப்பாகவே இருந்தது. அண்ணன், தம்பி, குழந்தைகள் ஒன்றாக விளையாடி, பள்ளிக்கூடம் சென்றார்கள். சித்தியோ, பெரியம்மாவோ, பாட்டியோ அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் இரட்டைப்பின்னல் போட்டு பூவைப்பார்கள். வெள்ளிக்கிழமை பெண் பிள்ளைகள் எண்ணெய் தேய்த்து குளிப்பதும், சனிக்கிழமையானால் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதும் பழக்கத்தில் இருந்தது.
எண்ணெய்க் குளியல் ஆன நாட்களில் பத்திய சாப்பாடு அனைவருக்கும் பக்குவமாக தரப்பட்டது. மிளகு, சீரகம் போன்றவற்றில் ரசமும், பத்திய தொகையல், மிளகுக் குழம்பு போன்றவை சிறப்பாக இருக்கும். கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வந்த நடுத்தர நாட்களில் தனிக்குடுத்தனங்கள் நிறைய காணப்பட்டாலும், உறவினர்கள் வருகை அதிகம் இருந்தது. சிறிய பண்டிகை அல்லது விழாக் காலங்களாக இருந்தாலும், பிறந்த வீட்டிற்குச் சென்று கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளை புகுந்த வீட்டில் அனைவருடனும் கொண்டாடினார்கள். ஒன்றாக குடும்பங்கள் இருந்த காலத்தில் சேமிப்பும் நிறையவே செய்தார்கள். குடும்பச் செலவை பங்கிட்டுக் கொள்ளும் பொழுது ஒவ்வொருவருக்கும் மிச்சம் செய்ய முடிகிறது. வீட்டு வாடகை அல்லது கடன் கட்டும் செலவு முதல், மின்சாரம் வரையிலான செலவை சம்பாதிப்பவர் பங்கிட்டு குடும்ப நிர்வாகத்தினரிடம் தந்து விட்டால் போதும். தனித்தனியான வீடுகளில் வசிக்க ஆரம்பித்ததால், அனைத்து செலவுகளும் நம் கையிலிருந்துதான் செலவிட வேண்டும். வேலைகள் அனைத்தும் நாமே செய்ய நேரிடுகிறது. வேலையை பகிர்ந்து செய்ய உதவிக்கு ஆள் இல்லாததால் நாம் மேல் வேலைகளுக்கு ஆள்வைக்க வேண்டிவரும்.
குடும்பத்தில் இருப்பவர் காட்டும் அன்பும் பாசமும் நாம் பிறரிடம் எதிர்பார்க்க முடியாது. இன்றைய காலக்கட்டம் குடும்பங்கள் தனித்தனியாக இருப்பதுதான் நாகரீகமென ஆகிவிட்டது. திருமணம் முடிந்தவுடனே தனிக்குடுத்தனங்கள்தான் வரவேற்கப்படுகின்றன. அனைத்து குடும்பப் பொறுப்புகளையும் புரிந்து கொண்டு விடுகிறார்கள். குழந்தை பிறக்கும் சமயம் துணைக்கு அம்மாவோ, மாமியாரோ வேறு பெரியவர்களோ ஆசை ஆசையாக உதவிக்கு வருகிறார்கள்.
வெளிநாடுகளில் ‘டெலிவரி’க்குக் கூட யாருமில்லாமல், அவர்களே மனைவிக்குத் துணையாக கணவனும், கணவனுக்கு துணையாக மனைவியும் சமாளித்துக் கொள்கிறார்கள். தாய்-தந்தை இல்லாத ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகளும் தனித்தனியாக தங்கள் மனைவி, குழந்தைகளுடன் குடும்பம் நடத்தினார்கள். கடைசிப் பிள்ளைக்கு சரியான படிப்பு, சரியான வேலை இல்லாததால் தங்களுடன் இருக்குமாறு மற்றவர்கள் அழைத்தும் அவன் செல்ல மறுத்து விட்டான். தனி வீட்டு வாடகை, குடும்பச் செலவு என இடையிடையே வேலையில்லாத காலத்தில் சிரமப்பட்டான். பிள்ளைகள் பிறந்து, குடும்பம் பெரியதாகி, கல்விக்கு செலவு செய்ய வேண்டியதாயிற்று.
அவன் நிலையை புரிந்துகொண்டு மற்றவர்கள் உதவினார்கள். முதல் பிள்ளையும், மூன்றாவது பிள்ளையும் அரசு வேலையில் அமர்ந்துவிட்டதால் அவர்கள் குடும்பம் சுமுகமாக ஓடிக்கொண்டிருந்தது. இரண்டாவது பிள்ளையும் தனியார் துறையில் வேலை பார்த்தான். அவன் நான்காவது மகனுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தான். திடீரென அவன் வாழ்க்கையிலும் சறுக்கல் ஏற்பட்டது. யாரோ மேலிடத்தில் தவறு செய்ய, அவரின் அலுவலகத்திலும் பிரச்னைகள் ஏற்பட, வருமானம் குறையலாயிற்று.
சம்பளம் கூட இல்லாமல் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தமாயிற்று, தனக்குக் கீழ் தனக்காக வேலை செய்தவர்களை கஷ்டப்பட விடக்கூடாது என்பதற்காக, தன் சேமிப்பையெல்லாம் கரைத்து அவர்களுக்கு வேறு வழி ஏற்படுத்தி தந்தான். இரண்டாம் பிள்ளை பிறருக்கு உதவப் போய் கடன் சுமை சேர்ந்தது. சொத்தை விற்றான். சொந்தக்காரை விற்றான். அப்பொழுதும் ஆறுதல் தருமளவு அவனுக்கு யாரிடமிருந்தும் நல்ல சொற்கள் கிடைக்கவில்லை.
அவன் உதவியைப் பெற்றவர்கள் இனி அவனிடம் எதுவும் கிடைக்காது என்று தெரிந்தவுடன் விலக ஆரம்பித்தார்கள். அவன் இயல்பை நன்கு புரிந்துகொண்ட அவன் மனைவி மட்டும் எல்லாவிதத்திலும் ஆறுதல் தந்தாள். தன் சம்பாத்தியம் மூலம் முழு ஒத்துழைப்பு அளித்தாள். மனம் நொந்த கணவனுக்கு மன ஆறுதல் தந்ததோடு, மீண்டும் பழைய நிலை வரும் என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தாள்.
வயிற்றிற்கு நல்ல உணவு தந்தாலும், மனதளவில் மிகவும் குழம்பித் தவித்தான். குடும்பஸ்தனான இரண்டாம் மகன் இருக்கும் போது செலவு செய்ததால்தான் இப்பொழுது அவன் கஷ்டப்படுவதாக சிலர் குறை கூறினார்கள். அதுவும் அவனால் பலன் அனுபவித்தவர்கள் சிலர் இப்படிப் பேசினாலும், பலர் அவனுக்கு ஆறுதல் அளிக்க தவறவில்லை. வாழ்க்கை என்பது சுக துக்கங்கள் நிறைந்ததுதான். அதில் வெற்றி, தோல்வி என்பதும் சகஜம்தான். எதையும் எதிர்கொள்ள மன தைரியம்தான் தேவை என்பதை எங்கிருந்தோ கேள்விப்பட்ட சில உறவினர்கள் அன்புடன் விளக்கினார்கள். எந்த உதவியும் தயங்காமல் கேட்கும்படி அறிவுறுத்தினார்கள்.
மிகப்பெரிய துன்பத்தை சரியான நேரத்தில் சமாளித்து அவரைக்காத்த மனைவிக்கு ‘சலாம்’ என்றனர். அத்தகைய தூரத்து உறவுகள் என்றோ சந்திக்கக்கூடியவர்கள். அடிக்கடி தொடர்பிலும் இல்லாதவர்கள், இவரையும் மனைவியையும் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள். அவ்வளவு அழகாக ஆறுதல் தந்து அமைதியை ஏற்படுத்தினார்கள். அத்தகைய உறவுகளின் வரவழைப்பு மனதிற்கு ஆறுதல் தந்து புத்துணர்ச்சியை அளித்தது. கொஞ்சம் முன்னேற்றம் காணப்பட பிரச்னைகளை தீர்க்கவும் வழி கிடைத்துக் கொண்டிருந்தது. உறவினர்களின் மகத்துவம் அக்குடும்பத்திற்கு மருந்தாக செயல்பட்டு புதிய வாழ்வு கிடைத்தது போன்று தோன்றியது.
வசதிகள் பெருகிவிட்ட பின், உறவு முறைகள் தூரத்தில் சென்றுவிட்டன. ஆனாலும் சில உண்மை உறவுகள், உறவு முறையில் தூரம் காணப்பட்டாலும் மனதளவில் நெருங்கி விடுகிறார்கள். ஆதரவு தந்ததால், அதைப்பெற்றுக் கொண்டவர்கள் மனதில் உயர்ந்த இடத்தையும் மதிப்பையும் பெற்று விடுகிறார்கள். நாமும் மூதாதையர் வழிப்படி உறவுகளை அடையாளப்படுத்திக் கொண்டே இருப்பதால், மனம் விட்டு வேதனைகளையும், சாதனைகளையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
வசதியோடும், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும் வரை யாரையும் கண்டு கொள்ளாமல், திடீரென ஒரு நாள் உறவைத் தேடும்போது, அவர்கள் நமக்குக் கிடைப்பதில்லை, அதனால்தான் நம் பெரியோர்கள் பல்வேறு உறவுமுறைகளை நமக்கு ஏற்படுத்தித் தந்தார்கள். அதிலும் தமிழர் பண்பாட்டில் காணப்படும் பல்வேறு சடங்குகளும், அதை முன்னிறுத்திச் செய்யும் உறவுகளும் வேறு எங்கும் அமையாது. வெளித் தொடர்பே இல்லாமல் எங்கேயோ தனித்து வாழும் குடும்பங்கள் பிரிந்த உறவினர்களை நினைத்து ஏங்குகிறார்கள். நாம் ஒன்றை கருத்தில் கொண்டால், உறவுகளுக்குள் பேதமே ஏற்படாது. இன்று இருப்பது போல் யாருமே நாளை இருக்க முடியாது. வயது மூப்பு என்பது அனைவருக்குமே ஒருநாள் வரும். நன்றாக இருக்கும் போது நாலு உறவினர்களுக்கு உதவினால் போதும்.
பலபேர் உத்தியோகம், படிப்பு என்று மேலை நாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள். வசதியான வாழ்க்கை அமைந்து விடுகிறது அங்கு. ஆனால் அன்பும் பாசமும் எங்கிருந்து கிடைக்கும்? உறவுகளிடமிருந்து தானே! அங்கு சுதந்திர வாழ்க்கை அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம்.
ஆனால் இங்கு அவர்களையும் தாங்கிப்பிடிக்க உறவினர்கள் இருக்கிறார்கள். இப்பொழுதைய காலகட்டமே இப்படியென்றால், வரப்போகும் தலைமுறை என்ன கஷ்டப்படுவார்களோ? நம் பிள்ளைகளுக்கு நாம் வாழ்ந்த இளமைப்பருவத்தை கொஞ்சம் அவ்வப்பொழுது நினைவூட்டினால்தான் அவர்கள் மன உளைச்சலிலிருந்து வெளிவந்து தங்கள் குழந்தைகளுக்கு சிறிதளவாவது எடுத்துக்காட்டி வளர்க்க முடியும். துன்பத்தில் பங்கு கொள்ளும் பொழுதுதான் பிறரின் உண்மைத் தன்மை நமக்குத் தெரிய வரும். அவர்கள் உண்மை உறவாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? உண்மை உறவுகளாக மாற்றிக் கொள்ளலாமே!
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்
The post துன்பத்தில் பங்கு கொள்ளும் உறவுகள்! appeared first on Dinakaran.