துணைவேந்தர் பதவிகள் நிரப்புவதில் அரசியல் செய்வதை விடுத்து பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியாற்ற வழி விட வேண்டும்: ஆளுநருக்கு அமைச்சர் கோவி செழியன் பதில்

1 month ago 4

சென்னை: அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை: பல்கலைக்கழக துணைவேந்தர் காலியிடங்களை நிரப்பி- நிர்வாகத்தை செம்மைப்படுத்த ஆளுநர் மீண்டும் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு, ஏற்கனவே தெரிவித்த செய்தியையே திரும்ப தேதியை மாற்றி இன்று அறிக்கை வெளியிட்டு உள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. தேடுதல் குழு அமைக்க சார்ந்த பல்கலைக்கழக சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என தெளிவாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் நெறிமுறைகள் பரிந்துரை மட்டுமே. அதை அப்படியே கட்டாயம் மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசுகளை நிர்ப்பந்தப்படுத்துவது மக்களால் தேர்ந்தெடுத்த அரசுக்கு அரசியல் உள்நோக்கோடு கொடுக்கும் நெருக்கடி ஆகும். இதனை ஆளுநர் தவிர்த்து பல்கலைக்கழகங்கள் கல்விப்பணியாற்ற வழிவிட வேண்டும். பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் தேவையற்ற வகையில் மூக்கை நுழைப்பது போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் ஏற்கனவே பலமுறை குட்டுவைத்தும் தனது செய்கையினை மாற்றிக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது மட்டுமல்ல ஆளுநரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் ஆகும். இவ்வாறு ஆளுநர் தொடர்ந்து தலையிட்டு வருவதால் பல பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறி ஆகிவிடுமோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாநில பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியினை ஒன்றிய அரசு நிறுத்தியும் குறைத்தும் வருகிறது. இதனால் பல பல்கலைக்கழங்களின் நிதி நிலைமை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது. இதனை பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற பொறுப்பில் உள்ள ஆளுநர் தட்டிக் கேட்பதில்லை. நிதி ஒதுக்கீடு செய்யாமல் பல்கலைக்கழகங்களை முடக்கும் ஒன்றிய அரசின் செயல்பாட்டை மறைக்கவே பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஆளுநர் இப்படி அரசியல் செய்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

நிர்வாக குளறுபடிகளுக்கு காரணமான தனது செயல்களை ஆளுநர் இனியாவது நிறுத்தி தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை அளிக்க முன்வரவேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் ஆளுநர், முடிந்தால் பல்கலைக்கழக மானியக்குழுவிடம் அதிக நிதியை தமிழ்நாட்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு பெற்றுத் தரலாமே. மொழி உரிமை, கல்வி உரிமை போராட்டங்களை கண்ட தமிழ்நாட்டில் ஆளுநர் தனது சாய அரசியலை கைவிட வேண்டும். இப்பிரச்சினையை தமிழ்நாடு அரசு முறையாக, சட்டரீதியாக எதிர்கொள்ளும்.

The post துணைவேந்தர் பதவிகள் நிரப்புவதில் அரசியல் செய்வதை விடுத்து பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியாற்ற வழி விட வேண்டும்: ஆளுநருக்கு அமைச்சர் கோவி செழியன் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article