துணை வேந்தர் நியமனத்தில் தொடர் சிக்கல்

5 months ago 22

தமிழ்நாட்டில் உயர்க்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதில் பல்கலைக்கழகங்களின் பங்கு மகத்தானது. பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள்தான் தலை போன்றவர்கள். துணை வேந்தர்கள் நியமனத்தில் முன்பெல்லாம் எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஒரு துணை வேந்தரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். ஒருவருடைய பதவிக்காலம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அடுத்த துணை வேந்தரை நியமிக்கும் நடைமுறை தொடங்கிவிடும். புதிய துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்காக 3 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படும். அதில் ஒருவர் வேந்தர் என்ற முறையில் கவர்னராலும், ஒருவர் தமிழக அரசாங்கத்தாலும், மற்றொருவர் பல்கலைக்கழக சிண்டிகேட், செனட்டாலும் நியமிக்கப்படுவார்கள்.

இந்த குழு 10 பேர் கொண்ட பட்டியலை பரிசீலித்து, அதில் 3 பேரை தேர்ந்தெடுத்து பல்கலைக்கழக வேந்தரான கவர்னருக்கு அனுப்பிவைக்கும். அந்த மூவரில் ஒருவரை பல்கலைக்கழக துணை வேந்தராக கவர்னர் தேர்ந்தெடுத்து அறிவிப்பார். பல ஆண்டுகளுக்கு முன்புவரை இவ்வாறு துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதில் கவர்னருக்கும், அரசுக்கும் ஒருமித்த கருத்து இருந்தது. தேர்வும் சுமுகமாக இருந்தது. ஆர்.என்.ரவி கவர்னராக வந்தபிறகு இந்த தேர்வில் சிக்கல் ஏற்பட்டது. தேர்வு குழு அமைப்பதில் முரண்பாடு ஏற்பட்டது. தமிழக அரசு அனுப்பிய தேடுதல் குழுவை கவர்னர் ஏற்காமல் பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதி இடம் பெறவேண்டும் என்று வலியுறுத்தி தேடுதல் குழுவுக்கான பரிந்துரையை தொடர்ந்து திருப்பி அனுப்பினார்.

பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதி இடம் பெறவேண்டும் என்பதை தமிழக அரசு ஏற்கவில்லை. இந்த சிக்கல்களால் இப்போது கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய 6 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லை. இதனால் நிர்வாகமே முடங்கி போய் விட்டது. மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டமளிப்பு சான்றிதழ்களில் துணை வேந்தர்கள் பெயர்கள் இல்லை. இதனால் படித்து முடித்த மாணவர்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்படுகிறது. முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் தள்ளிப்போய்க்கொண்டு இருக்கிறது.

இந்த 6 பல்கலைக்கழகங்கள் மட்டுமல்லாமல், மேலும் பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிக்காலம் முடியும் தருவாயை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இப்போது இந்த சிக்கல்களை இன்னும் சிக்கலாக்கும் வகையில் மேலும் ஒரு புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது. பல்கலைக்கழக மானிய குழு துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுகளுக்கு பங்கு இல்லாமல் முழுக்க முழுக்க கவர்னர்களுக்கே அதிகாரம் அளிக்கும் வகையில் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கவர்னர் நியமிப்பவரே தேடுதல் குழுவின் தலைவராக இருப்பார். இதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதி ஒருவரும், சிண்டிகேட் மற்றும் செனட்டின் பிரதிநிதி ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

ஆக மாநில அரசுக்கு துணை வேந்தர் நியமனத்தில் ஒரு உரிமையும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அந்த மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதில் ஒரு பங்கும் இல்லையென்றால் அது நிச்சயமாக ஏற்புடையதல்ல. எனவேதான் தமிழக அரசும் இதை கடுமையாக எதிர்த்து சட்டசபையில் இந்த புதிய விதிகளை திரும்பப்பெற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேறியுள்ளது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களின் இந்த கோரிக்கையை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு பல்கலைக்கழகங்களில் தேவையற்ற தலையீட்டை நீக்கவேண்டும். 

Read Entire Article