துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து

3 months ago 22

சென்னை: துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார். “இளம் வயதில் உயர்ந்த பொறுப்பேற்றிருக்கும் அவர் திராவிட அரசியலையும், தமிழினத்தின் உரிமைகளையும் பாதுகாக்கும் பெரும் கடமையை ஏற்றிருக்கிறார்” என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “தமிழ்நாடு அரசின் துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். திராவிட மாடல் அரசை பாதுகாக்கும் காவல் அரணாக அவர் திகழ்வார் என்பதில் ஐயமில்லை!

இளம் வயதில் உயர்ந்த பொறுப்பேற்றிருக்கும் அவர், திராவிட அரசியலையும்; தமிழினத்தின் உரிமைகளையும் பாதுகாக்கும் பெரும் கடமையை ஏற்றிருக்கிறார். திராவிட மாடல் அரசுக்கு வரும் இன்னல்களை தகர்க்கும் படைக் கருவியாய் அவர் செயல்படுவார் என்ற நம்பிக்கையை தனது முந்தைய செயல்பாடுகள் மூலம் அவர் நிருபித்திருக்கிறார்.

பெரியார் தூக்கிப் பிடித்த சமூக நீதி சுடரையும், அண்ணா வகுத்துத்தந்த அரசியல் நெறிகளையும், கலைஞர் அவர்களின் துணிச்சலையும் மனதில் நிறுத்தி; நுட்பமான திறனுடன் தற்போதைய முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்கள் ஆட்சியை நடத்தி வருகிறார். அதே கொள்கை வழியில் நின்று, ஆட்சியிலும்; கட்சியிலும் செயல்பட்டு சிறப்புகள் பல பெற அவரை மனதார வாழ்த்துகிறோம்.மேலும் அவருடன் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இதர அமைச்சர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

The post துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article