சென்னை: துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரின் கருத்துக்கு திருச்சி சிவா எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நிர்வாகம், சட்டமன்றம்/ நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களை கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இந்த மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது. ஆளுநர்கள் மற்றும் குடியரசுத்தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைக்குடியரசு தலைவர் ஜக்தீப் தங்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்திய ஒன்றியத்தில் ‘‘சட்டத்தின் ஆட்சி” தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post துணை ஜனாதிபதி கருத்துக்கு திருச்சி சிவா கண்டனம் அனைத்தையும் விட அரசியலமைப்பே உயர்ந்தது என்பதை மறக்க வேண்டாம் appeared first on Dinakaran.